கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரமாண்ட மாநாட்டை எடப்பாடி அறிவித்ததும், கட்சியின் மொத்த நிர்வாகிகளையும் வேலை வாங்கத் தொடங்கினார் எடப்பாடி. உணவு, வரவேற்பு என ஓவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குழுக்களென மொத்தம் ஒன்பது குழுக்களை அமைத்தார் எடப்பாடி. ஆனால், உணவு விஷயத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து வருவதோடு, அரசியல் ரீதியாக சில நல்ல வாய்ப்புகளை எடப்பாடி தவறவிட்டுவிட்டார் என்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய சீனியர்கள், " எடப்பாடி இடைக்கால பொதுச் செயலாளரானர் ஆனபோதே, ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் தரப்பினர், அ.தி.மு.க-வில் சமூக ரீதியான பிளவை ஏற்படுத்த முயன்றனர். அதனால்தான், கட்சியின் சீனியர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் தென் மாவட்டத்தில், குறிப்பாக மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என்று எடப்பாடியிடம் தெரிவித்தனர். ஆனால், அப்போது அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. ஆனால் பொதுச் செயலாளர் ஆனப்பின்னர், மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடத்தவேண்டுமென்று எடப்பாடி தரப்பில் இருந்தே முன்மொழிப்பட்டது.
அதன்படிதான், ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்த முடிவானது. இதைத்தொடர்ந்து, மதுரை திருமங்கலம் தொகுதியில்தான் பெரிய அளவிலான இடமிருக்கிறது. இடத்தேர்வை நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆர்.பி.உதயக்குமார் தாமாகவே முன்வந்தார். ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூவும் அதற்கான வேலைகளை பார்த்தனர். ஆனால், மாநாடு தொடர்பான வேலைகள் தொடக்கத்தில் இருந்தே, கொங்கு பகுதியில் நிர்வாகிகளின் தலையீடு அதிகமாக இருந்தது. எடப்பாடியின் நிழலாக இருக்கும் வேலுமணி, தங்கமணி, இளங்கோவன் உள்ளிட்டோர் வீம்புக்கு ஏதாவது குறைச் சொல்லிக் கொண்டே இருந்தனர். மாநாட்டுக்கான குழுவில், தென் மாவட்ட எம்.எல்.ஏ-களுக்கும், மா.செ.க்களுக்கும் பிரதிநித்துவம் கொடுக்கப்படவில்லை என்பது சலசலப்பு ஏற்பட்டது. இதன் விளைவுதான் மாநாட்டில் உணவு, வரவேற்பு உள்ளிட்ட விவகாரங்களில் பிரதிபலித்தது.

குறிப்பாக, மாநாட்டில் பேசிய எடப்பாடி தொடக்கத்திலும், உரை முடிவிலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கும் உதயகுமார், சீனியர் மாவட்ட செயலாளர்களான ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ உள்ளிட்டோரின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தது சர்ச்சையாகியிருக்கிறது. மதுரையில் பெரிய அளவில் கட்சி நிகழ்ச்சி நடந்தால், கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மதுரை செலுத்துவது வழக்கம். ஆனால், மாநாடு நடக்கும் முன்தினமே எடப்பாடி மதுரைக்கு வந்துவிட்டார். இதுகுறித்து அவரது தரப்புக்கு முன்கூட்டியே தெரிவித்தும், அதை அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை. ஏற்கனவே, பசும்பொன்னார் குரு ஜெயந்திக்கு எடப்பாடி நேரில் வராதது பிரச்னையாக இருக்கிறது.
ஓ.பி.எஸ் உள்ளிட்டோர், எடப்பாடி கட்சியை தனது சமூக ரீதியாக வழிநடத்துகிறார் என்ற பேசிவந்தனர். அதை சரிசெய்யவே மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதை இந்த மாநாடு சரிசெய்யவில்லை என்பதை தாண்டி, விரிசலை விரிவுப்படுத்தி இருக்கிறது." என்றனர் விரிவாக. இதுஒருபுறமிருக்க எடப்பாடியின் பேச்சும் தொண்டர்கள் மத்தியில் பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்தவில்லை என்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.

``இந்த மாநாட்டின் நோக்கம் என்பது ஓ.பி.எஸ், தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்டவர்களுக்கு எடப்பாடியின் ஆளுமை மற்றும் கட்சி அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை தெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அடக்கம். அது நினைத்ததைவிட சிறப்பாகவே அமைந்துவிட்டது. அதேநேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்ப்படுத்தவேண்டிய பொறுப்பு எடப்பாடியாருக்கு உண்டு என்பதை அவர் மறந்துவிட்டார். திமுகவும், பாஜகவுக்கும் தேர்தல் வேலைகளை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது.
இந்த சமயத்தில் இவ்வளவு பெரிய மாநாடு நடத்தியும் கட்சியை தேர்தலுக்கு எடப்பாடி ஆயத்தப்படுத்தவில்லை. அவரது பேச்சில் தேர்தல் வாடையே இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர்., அம்மா மற்றும் தனது தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சொல்லியே நேரத்தை வீணடித்துவிட்டதாகவே தொண்டர்கள் கருதுகிறார்கள். வெறும் 15 நிமிடம்கூட தி.மு.க அரசின் ஊழல்களை பேசவில்லை. வழக்கமான அவரது அறிக்கைகளை தொகுத்ததுபோலவே அவரது பேச்சு அமைந்துவிட்டது உண்மையில் துர்தஷ்டமானதுதான். பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த தெளிவையும், அண்ணாமலையின் சர்ச்சை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவும் பேசி இருந்தால், தொண்டர்களும் நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை செய்ய வழிவகை செய்திருக்கும்.

தலைமையே தேர்தலுக்கு இன்னும் ஆயத்தமாகவில்லை என்பதுதான் அவரது பேச்சு காட்டுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவோ அல்லது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவோ இனி இதுபோன்ற ஒர் மாநாடு நடத்த முடியாது. நல்லதோர் வாய்ப்பை எடப்பாடியே வீணடித்துவிட்டார்" என்றனர் யதார்த்தமாக...
மதுரை மாநாடு மூலமாக அமைப்பு ரீதியாக நான்தான் அதிமுகவின் ஆளுமை என்பதை எடப்பாடி நிருபித்துவிட்டார் என்பது எந்தளவுக்கு உண்மையோ... மாநாட்டில் பேச வேண்டிய அரசியலை பேசாமல் தொண்டர்களை உற்சாகப்படுத்தாமல் கோட்டைவிட்டுவிட்டார் என்பதே யதார்த்த உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!
மேலும் படிக்க மதுரை அதிமுக மாநாடு: நிரூபித்தாரா சறுக்கினாரா எடப்பாடி பழனிசாமி?!