டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருக்கிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்குமிடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்துவருகிறது. குறிப்பாக, அரசு அதிகாரிகளை நியமிப்பது, இடமாறுதல் தொடர்பான விவகாரங்களில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதாக ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கிடையில், மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அந்த சட்டத் திருத்ததின்படி, டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிகாரம் இருக்கிறது.
இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். அதனால், தற்போது அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பொதுவாக அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும். எனவே, டெல்லி அவசர சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்தது. ஆனால், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே, மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 11-அமர்வு நடைபெற்ற நேற்று நாடாளுமன்றம் ஓரளவு செயல்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி உள்பட "I.N.D.I.A" கூட்டணி எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் வாதங்களும் நடைபெற்றது. விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், "மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சூழலில், டெல்லி மசோதாவை நிறைவேற்ற நினைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது" என்றார். தொடர்ந்து பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, ``சட்டப்பிரிவு 239AA-படி டெல்லி அரசிடமிருந்து அதிகாரங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்திற்கு எந்த வித அதிகாரமும் கிடையாது" என்றார். பின்னர் விவாதத்தில் பதிலளித்து பேசிய அமித் ஷா, "டெல்லி அரசு தனது ஊழல்களை மறைக்கவே டெல்லி அவசரச் சட்ட மசோதாவை எதிர்க்கிறது. இந்த அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கிறது.

தேசிய தலைநகரான டெல்லியில் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அதன் அடிப்படையில், டெல்லிக்கான சட்டங்களைக் கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. நமது அரசியலமைப்பு விதிகளிலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருப்பதால் மட்டும் டெல்லியில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நீங்கள் என்ன தான் கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடி தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்" எனக் காட்டமாகப் பேசினார். அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா எளிதாக நிறைவேறியது. மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மாநிலங்களவையில் இந்த அவசர சட்டம் நிறைவேறுமா அல்லது இந்தியா கூட்டணி தனது பலத்தை காட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.!
மேலும் படிக்க எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு; அமித் ஷாவின் பதில் - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட டெல்லி அவசரச் சட்டம்!