நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.40 கோடியில் புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தும், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்தார். இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டேவி, நாகர்கோவில் மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி, பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் பேசும்போது, "குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை. குளச்சல் ஆஸ்பத்திரியை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்க வேண்டும்" என பேசினார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது "எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதுதொடர்பாக அலுவலர்களுடன் கலந்துபேசி எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட வரவில்லை. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் பேசி 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வந்துள்ளார்.
தமிழகத்தில் 708 ஆஸ்பத்திரிகள் அறிவிக்கப்பட்டு ஒரு நாளில் 500 ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டது. இதில் நாகர்கோவில் மாநகருக்கு 10 அறிவிக்கப்பட்டு 5 ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் செவிலியர் கல்லூரிகள் 6 தான் இருந்தன. தற்போது மத்திய அரசிடம் பேசி 30 செவிலியர் கல்லூரி கேட்கப்பட்டது. அதில் 11 செவிலியர் கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. விரைவில் அவை தொடங்கப்படும். தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 478 தேசிய தர உறுதி சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில் கடந்த ஆண்டு மட்டும் 239 கிடைத்துள்ளது. 50 சதவீத சான்றிதழ்கள் இந்த ஆட்சியில் கிடைத்துள்ளது. 239 சான்றிதழ்களில் குமரி மாவட்டத்துக்கு மட்டும் 5 சான்றிதழ் கிடைத்துள்ளன.

கோட்டார் அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கை கூடிய கட்டடம் உள்ளது. ஆனால் 135 உள்நோயாளிகள் உள்ளனர். இதனால் இடப்பற்றாக்குறை உள்ளது. அடுத்த நிதி அறிக்கையில் கோட்டார் அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு மேலும் 100 படுக்கைகளுடன் கூடிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கன்னியாகுமரி, ராணிபேட்டை, திருப்பூர், ஈரோடு உள்பட 5 மாவட்டங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகம் உள்ளது. காஞ்சிபுரத்தில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது.
குளச்சல் அரசு மருத்துவமனையில் பிணவறை உள்ளது. மருத்துவர்களும் உள்ளனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ இப்போது என்னுடன் வந்தால் குளச்சல் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்யலாம்" என பதிலடி கொடுத்தார். இதனால் அரசு விழாவில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க `குளச்சல் மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை’ - காங்., எம்.எல்.ஏ-வை உடனே ஆய்வுக்கு அழைத்த மா.சு!