ஆன்லைனில் பொருள்களை விற்க முடிவு செய்த பின்னர், பெரும்பாலானோருக்கு எழும் சந்தேகங்கள் இரண்டு. நமது பொருளை வாடிக்கையாளருக்கு அனுப்பிவைப்பது எப்படி, விற்பனை செய்த பொருளுக்குப் பணம் பெறுவது எப்படி?
தற்போதைய நவீனத் தொழில்நுட்பச் சூழலில், கூரியர் நிறுவனங்களும், பேமென்ட் நிறுவனங்களும் இந்தக் கேள்விகளுக்கு எளியமுறையில் தீர்வளிக்கின்றன.

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற `மார்க்கெட் பிளேஸ்’ மூலம் ஆன்லைன் வர்த்தகம் மேற்கொள்ளும்போது, வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களை அனுப்புவதும், விற்பனைத் தொகையைப் பெறுவதும் எளிது. இவ்விரு பணிகளையும் அவர்களே மேற்கொள்வார்கள்.
அதே நேரத்தில், சிறிய அளவில் வணிகம் தொடங்கி, ஜி.எஸ்.டி இல்லாமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் பொருள்களை விற்பனை செய்ய விரும்பினால், நாமே சொந்தமாக பொருள்களை அனுப்பி, பணம் வசூலிக்க வேண்டும்.
வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மூலம் நமது பொருள்களை விளம்பரப்படுத்தும்போது, `கேஷ் ஆன் டெலிவரி’யைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், வாடிக்கையாளருக்குப் பொருள் போய் சேருவதற்குள், பலர் மனம் மாறி, பொருளைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். இதனால் நமக்கு கூரியர் செலவு வீண். எனவே, கேஷ் ஆன் டெலிவரியைத் தவிர்ப்பது நல்லது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் எண் ஏதாவது ஒன்றைக் கொடுத்து, பணம் செலுத்தியபின்னர், பொருளை அனுப்பிவைக்கலாம்.

மேலும், நமக்கென `பேமென்ட் கேட்வே’ இருப்பது, நம்பகத்தன்மையை அதிகரிக்கும். ஒரு ஃபேஸ்புக் குழுவில் சுமார் 1,000 பேர் இருந்தால், நமது பொருளைப் பற்றிய ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு, சிலர் அணுகுவார்கள். இந்த எண்ணிற்கு பணம் அனுப்புங்கள் என்றால் பலர் யோசிப்பார்கள். ஒருவேளை, இது ஒரு மோசடியாக (scam) இருக்கக்கூடுமோ என்று எண்ணுவர். ஆனால், பேமென்ட் கேட்வே லிங்க் அனுப்பினால் அவர்களுக்கு நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
ஏனெனில், ஒருவேளை நம் பொருள் சரிவர போய்ச் சேரவில்லை என்றால், செலுத்திய பணத்தை திரும்பப் பெறுவதோ அல்லது வழக்குத் தொடர்வதோ அவர்களுக்கு பேமென்ட் கேட்வே மூலம் சாத்தியமாகும்.
தற்போதெல்லாம் நிறைய `பேமென்ட் கேட்வே’ செயலிகள் வந்துவிட்டன. இன்ஸ்டாமோஜோ (Instamojo), பேயுமணி (PayUMoney), காஸ்மோஃபீட் (Cosmofeed) போன்ற பேமென்ட் கேட்வே-களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அவற்றில் லிங்க் உருவாக்கி, வாடிக்கையாளரிடமிருந்து பொருளுக்குரிய தொகையைப் பெறலாம்.

காஸ்மோஃபீட் செயலியில் நமது பொருள்களுக்காக பிரத்யேக பக்கத்தை உருவாக்கலாம். இன்ஸ்டாமோஜோவில் ஒருபடி மேலே போய், பிரத்யேக பக்கத்தில் பொருள்களை விளம்பரப்படுத்தி, ஷிப்பிங்-கைக் கையாளவும் இயலும்.
அதே நேரத்தில், பெரிய அளவு வணிகத்துக்குத் தனி வெப்சைட்டை உருவாக்க வேண்டும். அதற்கு ரேசர்-பே (Razerpay) பேமென்ட் கேட்வே உதவும். உங்களது வெப்சைட்டில் இதை இணைத்துவிட்டால், நமது வெப்சைட்டில் தனியாகவே பேமென்ட் பக்கம் தெரியும். தொகை வசூலானவுடன், குறிப்பிட்ட நாள்களுக்குள் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும்.
அதே சமயன், வெப்சைட் தொடங்கினாலும் `கேஷ் ஆன் டெலிவரி’ வாய்ப்பு கொடுக்காதீர்கள். பெரும்பாலானா பேமென்ட் கேட்வே-க்கள் ஜி.எஸ்.டி எண்ணைக் கேட்பதில்லை.
எனவே, வெப்சைட்டை தொடங்க உள்ளவர்கள் பேமென்ட் கேட்வே இணைப்பது இன்றியமையாதது ஆகும்.
(இன்னும் சொல்கிறேன்...)
மேலும் படிக்க ஆன்லைன் விற்பனையில் பணம் பெறும் வழிகள்...! நிவேதா முரளிதரன் எழுதும் ஆன்லைன் பிசினஸ் தொடர்!