புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த சகோதரர்கள் கவின், அசோக் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன). இவர்களின் வீட்டிற்கு சற்று தூரம் தள்ளியிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் கவின் எட்டாம் வகுப்பும், அசோக் ஐந்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரையும் நேற்று முன் தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கு அனுப்பினர் அவர்களது பெற்றோர். ஆனால் பள்ளிக்குள் அழுது கொண்டே ஓடிய அசோக், `நாங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், தனது அண்ணன் கவினை கடத்திச் சென்றுவிட்டார்கள்’ என்று பதற்றத்துடன் கூறினான். அதிர்ந்து போன பள்ளி நிர்வாகம் உடனே போலீஸாருக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து பள்ளிக்கு விரைந்த காரைக்கால் மாவட்ட காவல்துறை சீனியர் எஸ்.பி மணீஷ், எஸ்.பி சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீஸார், கடத்தப்பட்ட மாணவனின் தம்பி அசோக்கிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தாங்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தபோது, கறுப்பு நிற ஆம்னி காரில் முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் தனது அண்ணன் கவினை தூக்கிச் சென்றுவிட்டனர் என்று கூறினார். உடனே களமிறங்கிய போலீஸ், காரைக்காலில் இருக்கும் 7 சோதனைச் சாவடிகளிலும் சோதனையை இறுக்கியது. காரைக்காலில் இருந்து வெளியேறும் அனைத்து வாகங்களும் சல்லடையாக சோதனை செய்யப்பட்டது. அத்துடன் அனைத்து காவல் நிலையங்களும் முடக்கிவிடப்பட்டு, அனைத்து காவலர்களும் பள்ளியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ, புதுச்சேரியிலும், காரைக்காலிலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர். இதற்கிடையில் கருக்களாச்சேரி ஆற்றுப் பாலத்தின் அருகில் பயந்தபடி நின்று கொண்டிருந்த மாணவர் கவினைப் பார்த்த போலீஸார், அவரை மீட்டு, `பயப்பட வேண்டாம்’ என்று கூறி தண்ணீர் கொடுத்து தைரியமூட்டினர். மாணவர் கவின் மீட்கப்பட்ட விஷயம் உடனடியாக காவல்துறை மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு, என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது, `காரில் என்னை கடத்திய மூன்று பேரும், அவர்களது செல்போனில் என்னை போட்டோ எடுத்து யாருக்கோ அனுப்பினார்கள். அதன்பிறகு யாரிடமோ போனில் பேசினார்கள். அதன்பிறகு சாக்கடை கால்வாய்க்கு அருகில் என்னை கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்கள்” என்றார். அதையடுத்து மாணவர் கவினை போலீஸார் ஜீப்பில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தன்னை எப்படி கடத்தினார்கள் என்பதை நடித்துக் காட்டினார் மாணவர் கவின்.
அதேநேரத்தில் சம்பவம் நடந்த விதம், கடத்தல்காரர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனம் குறித்த தகவல்களுக்காக அந்த பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்த போலீஸார் குழம்பிப் போனார்கள். காரணம் மாணவர்கள் கூறியபடி எந்த சம்பவமும் அதில் பதிவாகவில்லை. சந்தேகமடைந்த போலீஸார் கவினிடமும், அசோக்கிடமும் மீண்டும் விசாரித்தனர். அப்போது, ``நேற்று வீட்டுப்பாடம் எழுதாமல் சென்றுவிட்டோம். அதனால் ஆசிரியர்கள் இன்று அப்பா, அம்மாவை பள்ளிக்கு அழைத்து வரச் சொன்னார்கள். வீட்டுப்பாடம் எழுதாதது அப்பா, அம்மாவுக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே கடத்தப்பட்டதாகக் கூறினோம்” என்று அவர்கள் கூற அழுவதா சிரிப்பதா என தெரியாமல் வாயடைத்து நின்றனர் போலீஸார்.
இந்த கடத்தல் நாடகம் நகைச்சுவை போல தோன்றினாலும், மாணவர்களின் தற்போதைய கல்வி முறை, பயிலும் சூழல் மற்றும் மதிப்பெண்களுக்காக கொடுக்கப்படும் அழுத்தங்கள் போன்றவை குறித்து ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது என்பதை மறுக்க முடியாது.!
மேலும் படிக்க புதுச்சேரி: பள்ளி மாணவன் கடத்தல் விவகாரம்; வாயடைத்துப் போன போலீஸார் - டிவிஸ்ட் என்ன தெரியுமா?!