மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்துவரும் மணிப்பூர் கலவரத்தில், குக்கி பழங்குடியினர் மீது சுமத்தப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, `அண்டை நாட்டு அகதிகளுக்கு குக்கி பழங்குடியினர் சட்டவிரோதமாக அடைக்கலம் தருகின்றனர்' என்று கூறுபடுவதே. ஆனால், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், `வன்முறையில் ஒரு சமூகத்தினரை மட்டும் குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' உச்ச நீதிமன்றமே கூறியிருந்தது.

இவ்வாறிருக்க மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது கடந்த மூன்று நாள்களாக விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டத்தொடரின் முதல் நாளில் அவையில் சிறிதுநேரம் இருந்த பிரதமர் மோடி, ஒருவழியாக நேற்றைய தினம் அவைக்கு வருகைதந்து உரையாற்றினார். முன்னதாக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பதிலளித்தார். இந்நிலையில், `மணிப்பூர் வன்முறைக்கு அகதிகள் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பழிபோடுவது தவறு' என்று பூர்வீக பழங்குடியினர் தலைவர்கள் அமைப்பு (Indigenous Tribal Leaders’ Forum) கருத்து தெரிவித்திருக்கிறது.
மேலும் இது தொடர்பாக அவர்கள் வெளியிட அறிக்கையில், ``மணிப்பூரில் இந்த மூன்று மாத கால வன்முறையால் 130 குக்கி-சோ (Kuki-Zo) பழங்குடியினர் கொல்லப்பட்டனர். 41,425 பழங்குடியினர் புலம்பெயர்ந்தனர். இது முற்றிலுமாக, மைதேயி மற்றும் பழங்குடியினருக்கு இடையிலான பிரிவினை. ஆனால், இதற்கு அகதிகளின் வருகை ஒரு காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் தருகிறார்.
அதேசமயம், மிசோரம் மாநிலமானது மியான்மரிலிருந்து 40,000 அகதிகளையும், மணிப்பூரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களையும் வரவேற்றிருக்கிறது. இருப்பினும், மிசோரம் இன்னும் கூட இந்தியாவின் மிக அமைதியான மாநிலமாக இருக்கிறது. பெரும்பான்மை சமூகத்தின் பழங்குடி அந்தஸ்து கோரிக்கை, பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பது குறித்த அரசின் அறிவிப்பு, பழங்குடியினர் மீதான முதல்வரின் தாக்குதல் மற்றும் மைதேயி சமூகத்தின் அறிவுஜீவிகளே, குக்கி, மைதேயிக்கு இடையிலான பிரச்னைக்கு காரணம்.

வன்முறையின் தலைமை சிற்பி என நாங்கள் கருதும் முதல்வர் பிரேன் சிங்கை அமித் ஷா இன்னும் பாதுகாத்து வருவது திகைப்பாக இருக்கிறது. அவரின் கண்காணிப்பில் தான், மூன்று மாதங்களாக வன்முறை நடந்துகொண்டிருக்கிறது, அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். எனவே மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சரிசெய்ய கட்சி அரசியலுக்கு அப்பால் முன்னோக்கிச் செல்லவேண்டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.
முன்னதாக மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய அமித் ஷா, ``2021-ல் ராணுவத்தினர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொண்ட பின்னர், அண்டை நாடான மியான்மரில் இருந்து வருகைதந்த குக்கி அகதிகளால் பிரச்னை தொடங்கின. மேலும், குக்கி அகதிகளின் வருகை மணிப்பூரின் மக்கள்தொகையில் மாற்றம் ஏற்படுத்தும் என்ற அச்சத்தை எழுப்புகிறது" என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க மணிப்பூர்: ``அகதிகள் மீது பழிபோடுவது தவறு!" - அமித் ஷா பேச்சுக்கு பழங்குடிகள் அமைப்பு எதிர்ப்பு