மேக்கேதாட்டூ அணை கூடாது என்று தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கும் நிலையிலும், மேக்கேதாட்டூவில் அணையைக் கட்டியே தீருவோம் என்று முறுக்குகிறது கர்நாடகா. தமிழ்நாட்டுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய 37.9 டி.எம்.சி தண்ணீரை வழங்குங்கள் என்று கேட்டால், முடியாது என்று மறுக்கும் கர்நாடகம், வேண்டுமானால் 10 டி.எம்.சி தண்ணீரை வழங்குகிறோம் என்று அடாவடி செய்கிறது.

கர்நாடகாவின் இன்றைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் மட்டும் இந்த நிலை இல்லை. இதற்கு முன்பு கர்நாடகாவில் முதல்வர்களாக இருந்த பசவராஜ் பொம்மை, பி.எஸ்.எடியூரப்பா, ஹெச்.டி.குமாரசாமி, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கௌடா, தரம்சிங், எஸ்.எம்.கிருஷ்ணா, ஜே.ஹெச்.பட்டேல், தேவகௌடா, வீரப்ப மொய்லி, எஸ்.ஆர்.பொம்மை உள்ளிட்டோர் தலைமையிலான ஆட்சிகளும் காவிரி நீர் பங்கீடு விவகாரங்களில் அநீதியான அணுகுமுறையையே கடைப்பிடித்தன.
காவிரி ஆறு கர்நாடகாவில் உற்பத்தியாகிறது என்பது உண்மைதான். அதற்காக, கர்நாடகாவைத் தாண்டி காவிரி செல்லும் மாநிலங்களுக்கு தண்ணீரைக் கொடுப்பதா வேண்டாமா, அல்லது, இவ்வளவு தண்ணீரைத்தான் தருவோம் என்று சொல்வதற்கான அதிகாரம் கர்நாடகாவுக்கு கிடையாது. ஓர் ஆற்றில் வருகிற தண்ணீரில் அந்த ஆற்றின் கீழே இருக்கும் பகுதிகளுக்குத்தான் முதல் உரிமை (Riparian) இருக்கிறது என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதன்படி, காவிரி ஆற்றின் நீரில் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் காவிரி நீரைப் பங்கிட்டுக்கொள்ளும் உரிமை இருக்கிறது

ஆனால், எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டோம் என்று கர்நாடகம் வீம்பு செய்கிறது. தமிழ்நாடு சம்மதித்தால் மட்டுமே மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியும். ஆனால், தமிழ்நாடு எதிர்த்தாலும் அங்கு அணையைக் கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் செய்கிறது கர்நாடகா.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து நீர்வளத்துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றதிலிருந்தே, மேக்கேதாட்டூ அணை, காவிரி நீர் பங்கீடு ஆகிய இரு விவகாரங்களில் முரண்டுபிடித்துவருகிறார். அவரும், கர்நாடகா அரசும் இந்த விவகாரத்தில் நடந்துகொள்ளும் விதம், இரு மாநில உறவுகளையும் பாதிக்கும் வகையிலேயே இருக்கிறது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு 37.9 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். அதை வழங்கினால்தான், டெல்டா மாவட்டங்களில் கருகிக்கொண்டிருக்கும் பயிர்களைக் காக்க முடியும்.

ஆனால், கர்நாடகா அரசு தண்ணீர் தர மறுக்கிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், 37.9 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் வலியுறுத்தினர். அதற்கு கர்நாடகா செவிசாய்க்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், ‘தமிழ்நாட்டுக்கு 10 டி.எம்.சி தண்ணீர் தருகிறோம். நீர் பங்கீடு விவகாரத்தில் பிரச்னை வேண்டாம்’ என்று பேசியிருக்கிறார் கர்நாடகா அமைச்சர் டி.கே.சிவக்குமார். “எங்களிடம் எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளதோ, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரப்படுகிறது. மழை வந்தால் நிச்சயம் தண்ணீர் தருவோம். மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியிருக்கிறார். மேக்கேதாட்டூ அணை, காவிரி நீர் பங்கீடு ஆகிய இரண்டு விவகாரங்களிலும் தமிழ்நாட்டுக்கு ‘செக்’ வைக்க கர்நாடகா முயல்கிறது.

உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகள், உத்தரவுகள் என எதையும் மதிக்காமல் தொடர்ந்து பிரச்னை செய்கிறது கர்நாடகா. தமிழ்நாடு அரசைப் பொறுத்தளவில், சட்டப்படியான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது.
சட்ட ரீதியிலான அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அரசியல் அழுத்தமும் கொடுக்கப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது. குறிப்பாக டெல்லி அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவளித்தால் இந்தியா கூட்டணிக்கு வருவேன் என கெஜ்ரிவால் சொன்னது போல், மேக்கேதாட்டூ விவகாரத்தை கைவிட்டால் தான் இந்தியா கூட்டணிக்கு திமுக ஆதரவு கிட்டும் என சொல்ல வேண்டும் என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் காவிரி விவகாரம் வெடிக்கும்போதும்,பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவில் வசிக்கும் தமிழ் மக்களும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். அதனால் விரைந்து இந்த விவகாரத்தில் சமரசம் காண்பதே நல்லது!
மேலும் படிக்க காவிரி தண்ணீரும் மேக்கேதாட்டூ அணையும் - தமிழகத்துக்கு ‘செக்’ வைக்கிறதா கர்நாடகம்?!