``தமிழகத்தில் சாதிய அடக்குமுறைகள் தொடர என்ன காரணம்?”
``காலம் காலமாகச் சாதிய அடக்குமுறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்துமதம் என்று ஒன்று இருக்கும்வரை சாதிகள் இங்கு இருந்துகொண்டேதான் இருக்கும். இந்து மதத்தை அம்பேத்கரும், பெரியாரும் எதிர்த்ததற்குக் காரணமும் அதுதான். இங்கிருக்கும் சாதியை எடுத்துவிட்டால் இந்துமதம் இருக்காது. இதனை உடைத்தெறியத்தான் பெரியார் தொடங்கி அண்ணா, கலைஞர், திருமாவளவன் எனப் பலரும் போராடி வருகிறோம். இந்த தலைவர்களின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு சமூகநீதி பேசும் ஒரு அரசு இருந்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.”

``நீங்கள் சொல்வதுபோல, `தி.மு.க., பெரியார், அண்ணா கருத்தை ஏற்றுக்கொண்டு, சமூக நீதி பேசும் அரசு’ என்று தானே தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள் . ஏன் இந்த அரசால் மாற்றம் நிகழாதா?!”
``உத்தரப்பிரசேதத்தில் ஒரு மாணவி பாதிக்கப்படுகிறார். மேல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்வதை, கீழ் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒத்துக்கொண்டுதான் வாழவேண்டும் என்று ஆளும் அரசின் ஒரு அமைச்சரே சொல்கிறார். இங்கு அப்படி ஒரு நிலை இருக்கிறதா? தவறு செய்தவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தகுந்த தண்டனை கிடைக்கிறது. தமிழக்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவருக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. நாம் கொள்கையை உள்வாங்கிக்கொண்டதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தபோதும் இந்த அரசு சாதி ஒழிப்புக்கு இன்னும் பல முன்னெடுப்புகளை எடுக்கவேண்டும்.”
``வைரமுத்துவுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர், திருமாவை முதல்வர் முகாம் அலுவலகத்தில்தான் வாழ்த்து தெரிவித்தார். கூட்டணியில் வி.சி.க-வுக்குத் தகுந்த மரியாதையைத் தரப்படுகிறதா?”
``பிறந்தநாளுக்கு முதல் தினமே முதல்வர் கலந்துகொள்ளும் ஒரு அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற தலைவர் அப்படியே வாழ்த்து பெற்றிருக்கிறார். தலைவரை விட முதல்வர் வயதில் பெரியவர். அவரிடம் நேரில் சென்று வாழ்த்து பெறுவதில் என்ன தவறு இருக்கிறது. எங்கள் தலைவர் உட்காரும் நாற்காலி முதற்கொண்டு கண்காணிக்கப்பட்டு பிரச்னை கிளப்பப்படுகிறது. தி.மு.க கூட்டணியிலிருந்து வி.சி.க-வை வெளியேற்றவேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனைக் கடந்து செல்வதே சரி.”

``வி.சி.க தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துக்கொண்டே இருப்பது எதனால்?”
``சமூக நீதியைப் பேசுபவர்கள், சகோதரத்துவத்தைக் கட்டமைக்க விரும்புபவர்கள் அனைவருமே அவர்களை எதிர்ப்பார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதுடன், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுகிறார்கள். நாட்டின் மதச்சார்பின்மையைச் சிதைத்து இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறார்கள். சமத்துவ இந்தியாவைச் சனாதன இந்தியாவாக மாற்ற நினைகிறார்கள். அவர்களை எதிர்க்கவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. கோட்சேவின் வாரிசுகளுக்கும், அம்பேத்கரின் வாரிசுகளுக்கும் போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கும்.
``எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வை ஒன்றிணைத்து விட்டார் என்று நினைக்கிறார்களா அல்லது இன்னும் குழப்பம் நீடிக்கிறதா?”
``நடப்பதையெல்லாம் வைத்து அவர் அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்து வெற்றிபெற்றுள்ளார் என்றே பார்க்கமுடிகிறது. இருந்தும் என்ன பயன்? அண்ணாவைப் பெயரில் வைத்துள்ள ஒரு கட்சி அவரின் கொள்கையில் நேரெதிராக உள்ள பா.ஜ.க-வுடன் அல்லவே கூட்டணி வைத்திருக்கிறது. அதனையும் தாண்டி பா.ஜ.க-வின் தொங்கு சதையாக அ.தி.மு.க மாற்றியிருப்பது வரலாற்றுச் சோகம். இது எடப்பாடி பழனிசாமி அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம் என்பதை அந்த கட்சியின் தொண்டர்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள்.”

``அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்வதால் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்குப் பலன் உண்டா?”
``அண்ணாமலை தவிர்த்து இதில் யாருக்கும் எந்த பலனும் இல்லை. அண்ணாமலை தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்திக்கொள்ள ஒரு யாத்திரை மேற்கொள்கிறார். அதற்குத் தமிழக பா.ஜ.க-வில் உள்ள தலைவர்களின் ஆதரவு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அது ஒரு கேலிக்கூத்தான தோல்வியடைந்த யாத்திரை. அதைப் பற்றிப் பேச வேறெதுவும் இல்லை.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க ``கோட்சே, அம்பேத்கர் வாரிசுகளுக்கிடையே போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கும்" - சொல்கிறார் வன்னி அரசு