ராகுல் காந்திமீதான அவதூறு வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. இதனால், அவர் மீண்டும் தனது எம்.பி பதவியைப் பெறுவதற்கான வேலைகளை காங்கிரஸ் தரப்பு துரிதமாகச் செய்துவருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி என்ற சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியது, அந்த சமுதாயத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ராகுல்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால், ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை, குஜராத் உயர் நீதிமன்றமும் உறுதிபடுத்தியது.
இதனை எதிர்த்து ராகுல் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பு, 'நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்' என ராகுல் வீர வசனம் பேசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, `மன்னிப்பு கேட்க, நான் சாவர்க்கர் அல்ல' என நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடி அந்தமான் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடும் தண்டனை அனுபவித்த, வீர் சாவர்க்கரை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசினார்.

அதற்கு, காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்றவர்களே கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. மன்னிப்பு கேட்க மாட்டேன் என ராகுல் பேசியதை, ஏதோ அவர் மன்னிப்பே கேட்காத மாவீரர்போல, காங்கிரஸ் கட்சியினரும், அந்தக் கட்சியின் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. ராகுலைப் பொறுத்தவரை, பிற கட்சிகளை, தனக்குப் பிடிக்காத தலைவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அதனால் அவர்மீது, 10-க்கும் அதிகமான அவதூறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ரஃபேல் போர் விமானம் தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கூறாத ஒன்றை கூறியதாக ராகுல் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அதற்காக அவர்மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கடந்த 2019 ஏப்ரலில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. ஆனால், இப்போது இதுவரை மன்னிப்பே கேட்காததுபோல வீர வசனம் பேசி வருகிறார். ராகுல், இடத்திற்கு இடம், நேரத்துக்கு நேரம் மாற்றிப் பேசும் சந்தர்ப்பவாத தலைவர் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

எப்படியாவது பிரதமராகிவிட வேண்டும் என்ற அதிகார வெறியில் ராகுலும், காங்கிரஸ் கட்சியினரும் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். ராகுலின் வெறுப்பு பிரசாரத்துக்குத்தான் சூரத் நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தண்டனை வழங்கின. இந்த தண்டணையை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும், ராகுலின் வெறுப்பு பேச்சை சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், எப்போதும்போலவே, உண்மை வென்றது, நீதி வென்றது என்றெல்லாம் பேசி உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால், மக்கள் அனைத்தையும் அறிவார்கள். அதனால்தான், 1989-லிருந்து 35 ஆண்டுகளாக நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாராலும் பிரதமராக முடியவில்லை. 2014, 2019 எனத் தொடர்ந்து இரு மக்களவைத் தேர்தல்களில், எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத அளவுக்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் இதுதான் நடக்கும். தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க ``இதுவரை மன்னிப்பே கேட்காததுபோல வீர வசனம் பேசி வருகிறார் ராகுல் காந்தி!" - வானதி சீனிவாசன் தாக்கு