கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க
“நீட் தேர்வு எழுதாமல் மருத்துவரான சகோதரி தமிழிசை போன்றவர்களே, ‘நீட் தேர்வால் கல்வித்தரம் உயரும், திறமையுள்ளவர்கள்தான் மருத்துவராக முடியும்’ என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அப்படியென்றால், அவர் திறமையான மகப்பேறு மருத்துவர் இல்லையா... சமீபத்தில் நீட் தேர்வில் வெறும் 96 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததையும், 512 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவனால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதையும் நாடு பார்த்தது. இதில் திறமை எங்கே கணக்கிடப்படுகிறது... பணமிருப்பவர்கள், படிப்பில் சுமாராக இருந்தாலும் கோச்சிங் சென்டருக்குப் போய் நீட்டில் பாஸ் செய்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற நிலையை உருவாக்கி, ஏழை, எளிய மாணவர்களுக்குத் துரோகம் செய்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. கூட்டாட்சித் தத்துவத்தின்படி, நீட் தேர்வுக்கு விலக்கு தர மாட்டோம் என்று சொல்ல முடியாது. ஆனால், பா.ஜ.க அரசு அரசியலமைப்புச் சட்டத்தையே மதிக்காது என்பதைத்தான் சில ஆளுநர்களின் பேச்சு காட்டுகிறது. ‘இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்போது நீட் தடுப்புச்சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். கையெழுத்து போட மாட்டேன் என்பவர்களெல்லாம் காணாமல்போய்விடுவார்கள்’ என்று நம் முதல்வர் ஸ்டாலின் சொன்னது நடக்கத்தான் போகிறது. பா.ஜ.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்ததும் அரசியலமைப்புச் சட்டப்படி, தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை நாங்கள் நிச்சயம் வாங்கிக் காட்டுவோம்.’’

ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க
``அக்கா தமிழிசை சொல்லியிருப்பது முழுக்க உண்மை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, `நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்துசெய்வோம்’ என்று மேடைக்கு மேடை வீர வசனம் பேசினார்கள் தி.மு.க-வினர். ‘எங்களுக்குத்தான் நீட் தேர்வை ரத்துசெய்யும் ரகசியம் தெரியும்’ என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றியவர்கள்தானே இவர்கள்... ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது, அந்த ரகசியம் என்னவென்று கேட்டால் சட்டப் போராட்டம் என்று வாய் கூசாமல் சொல்கிறார்கள். நீட் தேர்வைவைத்து தி.மு.க செய்த அரசியலால் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையங்களைக்கூட முறையாகச் செயல்படுத்தவில்லை இந்த அரசு. தி.மு.க ஏற்படுத்திய குழப்பத்தில் பல மாணவர்கள் தேர்வுக்குச் சரியாகத் தயாராகவில்லை என்பதே உண்மை நிலவரம். எல்லாத் தவறுகளையும் தி.மு.க-வினர் செய்துவிட்டு ஆளுநரையும், மத்திய அரசையும் குற்றம் சொல்லி பிரச்னையைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டும் நீட் தொடர்பான தற்கொலைகள் அதிகம் நடப்பது, தவறு மாநில அரசுமீதுதான் என்பதற்கான சான்று. நீட் தேர்வைக் கொண்டுவந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்துவிட்டு, இப்போது நீட் வேண்டாம் என நாடகமாடும் தி.மு.க-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டத்தான் போகிறார்கள். அதை நாமும் பார்க்கத்தான் போகிறோம்!’’
மேலும் படிக்க நீட்டை விலக்க முடியாது என்று தெரிந்தேதானே பொய் வாக்குறுதி கொடுத்தார்கள் என்ற தமிழிசையின் கருத்து?