``மணிப்பூரில் பொதுமக்கள் சர்வ சாதாரணமாக ஆயுதம் பயன்படுத்துவதாக வரும் தகவல்கள் உண்மைதானா?"
``குக்கி இன மக்களை சந்திக்க சென்றபோது மைதேயின பெண்கள் 300 பேர் ஆயுதம் ஏந்தி வாகனத்தை சோதனையிட்டனர். குக்கியின மக்களுக்கான நிவாரணப் பொருள்களை கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. குக்கியின மக்கள் மலைகளில் இருந்து கீழே வந்துவிடக் கூடாதென்பதிலும் குக்கி பகுதிக்குள் மைதேயின மக்கள் வந்துவிடக் கூடாதென்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். இருதரப்பு மக்களுமே கையில் ஆயுதம் வைத்திருக்கிறார்கள்.”

``நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் முறையாக இருக்கிறதா?”
``குக்கியின மக்கள் வாழும் பகுதிகளிலுள்ள முகாமில் எந்தவொரு அடிப்படை வசதிகளுமே முறையாக இல்லை. வருத்தமளிக்கக் கூடிய வகையில், போதிய உணவு பொருள்களோ, மருத்துகளோ, மருத்துவர்களோ, கழிவறை வசதிகளோ செய்துதரப்படவில்லை. அணிந்து வந்த உடையோடு பலர் பல நாள்களாக நிவாரண முகாம்களில் இருக்கிறார். 100 பேர் இருக்கக்கூடிய இடத்தில் 1000 பேர் என்ற கணக்கில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். முகாம்களில் மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் நடந்து கொண்டிருக்கிறது. பாராசிட்டமால் மாத்திரை கூட அவர்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. பசியில் சிறு குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கலவரத்தில் மரணிப்பவர்களை விட அடிப்படை வசதிகளின்றி மக்கள் மரணிக்கும் சூழலே நிலவுகிறது.”
``மக்களை காக்க எதாவது நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறதா... மணிப்பூர் மாநில அரசு?”
``மாநில அரசு முற்றுமுழுதாக செயலிழந்துவிட்டது. அமைதிப் பேச்சுவார்த்தைதான் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும். அதனை செய்ய வேண்டும் இடத்தில் மாநில அரசு இல்லவே இல்லை. மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். கலவரத்தை தடுப்பதற்கான வழிகளைத் தேடாமல் மாநில அரசு கலவரத்துக்குத் துணை போகிறது. அமைதிக்கு துணைபோக வேண்டிய அரசே, அமைதியே வந்துவிடக் கூடாதென்ற நினைக்கக் கூடிய அரசாக இருக்கிறது. மக்களைக் காப்பாற்ற உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.”

``மணிப்பூர் விவகராத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் பார்வையென்ன?”
``குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள் என நாங்கள் கோரிக்கை வைப்பதற்கு காரணமே, மத்திய அரசும் தோற்றுவிட்டது என்பதால்தான். மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க-தானே இருக்கிறது. அவர்கள் நினைத்தால் அமைதியை கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் அதற்கு அவர்கள் விரும்புகிறார்களா என்பதே கேள்வியாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பேசிவரும் பிரதமருக்கு அதற்கான அர்த்தத்தை யாராவது கற்பிக்க வேண்டும். மணிப்பூர் செல்வதற்கே மோடி தயக்கம் காட்டுகிறார்."
”’மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோருகிறீர்கள். ஆனால் அமித் ஷா-வோ ’மணிப்பூர் முதலமைச்சர் ஒத்துழைப்பு தருகிறார், ஒத்துழைப்பு தராவிட்டால் மாற்றலாம்’ என்றல்லவா பேசியிருக்கிறார்?”
``மத்திய பா.ஜ.க-வுக்கு மாநில பா.ஜ.க ஒத்துழைப்பு தருவது பெரிதல்ல. மாநில அரசு மக்களுடன் ஒத்துழைக்கிறார்களா... கலவரத்தை நிறுத்த ஒத்துழைக்கிறார்களா... என்பதே முக்கியம். இதே அமித் ஷாதான் இருதரப்பு மக்களும் மத்திய அரசுடன் பேசுங்கள் என்று சொல்கிறார்...அவர் ஏன் மாநில அரசுடன் பேசுங்கள் எனச் சொல்லவில்லை. ஏனெனில் மாநில அரசின் மீது அமித் ஷாவுக்கே நம்பிக்கையில்லை.”

``தி.மு.க-வின் இரண்டரை ஆண்டு ஆட்சி மீது கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.. ம.நீ.ம-வின் பார்வையென்ன?”
``தி.மு.க அரசு நிறைய விஷயங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்குச் செவி கொடுக்கக் கூடிய அரசாக இருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம் ஏற்பில்லாத விஷயங்களை ம.நீ.ம சுட்டிக் காட்டுகிறது.”

``ஆனால், ஊழல், சட்ட ஒழுங்கென எதிர்க்கட்சியான அ.தி.மு.க அனுதினமும் விமர்சிக்கிறது, அவ்வளவு ஏன் அண்ணாமலை தி.மு.க-வின் ஊழலுக்கு எதிராகத்தான் நடைபயணமே நடத்துவதாக சொல்கிறாரே?”

``முதலில் அ.தி.மு.க என்ற கட்சி தமிழகத்தில் இருக்கிறதா... அப்படியே இருக்கிறதென்றால் மக்கள் நலன் சார்ந்து செயல்படுகிறதா... கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை பார்த்துக் கொள்ளவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வதால் அவரின் உடல்நிலை சீராகுமே தவிர அரசியல் ரீதியாக எந்த மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை.”
மேலும் படிக்க ``மணிப்பூர் முகாம்களில் மருத்துவர்களின்றி பிரசவம் நடக்கிறது!” - விவரிக்கிறார் ம.நீ.ம அருணாச்சலம்