சர்க்கரை நோய் என நாம் அழைக்கும் நீரிழிவு நோயை, முந்தைய காலத்தில் பணக்கார வியாதி என்று சொல்வார்கள். ஏனென்றால் பெரிய அளவில் உடல் உழைப்பில்லாத, வசதி படைத்தவர்கள்தான் அதிகளவில் நீரிழிவுக்கு ஆட்பட்டதால் அப்படியாகக் கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கு அந்த நிலை முற்றிலுமாக மாறி வயது வேறுபாடு, வர்க்க வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நீரிழிவுக்கு ஆளாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. வருமுன் காப்பதே சிறந்தது என்கிற தாரக மந்திரம் அனைத்து நோய்களுக்கும் பொருந்தக்கூடியது. எந்த நோயாக இருந்தாலும் முடிந்தவரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது எளிது.

அந்த வகையில், நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி என்பதை, சென்னையைச் சேர்ந்த நீரிழிவு நோய் மருத்துவர் முத்துக்குமரன் ஜெயபாலிடம் கேட்டோம்…
``வழக்கத்துக்கு மாறாக அதிக தாகம் எடுப்பது, அதிக அளவில் சிறுநீர் கழிப்பது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக அளவில் பசி எடுப்பது, சாப்பிட்ட உடனேயே தூக்கம் வருவது அல்லது தலைசுற்றல் மற்றும் அரை மயக்க நிலைக்குச் செல்வது என நிறைய அறிகுறிகள் இருக்கின்றன. திடீரென எடை அதிகரிப்பது அல்லது குறைவது ஆகிய இரண்டுமே கூட நீரிழிவின் காரணமாக நடக்கும். ரத்த சர்க்கரை அளவு 200 என்கிற அளவில் இருந்தால் உடல் எடை கூடவும், 300க்கும் அதிகமாக இருந்தால் உடல் எடை குறையவும் வாய்ப்பிருக்கிறது.
கால் பகுதிகளில் எரிச்சல் மற்றும் குடைச்சல், சில நேரங்களில் பார்வை தெளிவில்லாமல் போவது, தோல் அரிப்பு, உடலில் ஏற்படும் காயங்கள் ஆறாமல் இருப்பது, அதாவது ஒரு வாரத்தில் ஆற வேண்டிய காயம் இரண்டு வாரங்களைக் கடந்த பின்பும் ஆறாமல் இருப்பது... இவையெல்லாம் இருந்தால் சந்தேகப்படலாம். மேற்சொன்ன இந்த அறிகுறிகள் நமக்கு வெளிப்படையாகத் தெரிபவை. இன்னும் 50 சதவிகித அறிகுறிகள் நமக்குத் தெரியாமலேயே இருக்கும்.

இதன் காரணமாகத்தான் இது போன்ற சில அறிகுறிகள் தென்படும்போதே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது என்கிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகிய மூன்றையும் `சைலன்ட் கில்லர்ஸ்’ என்று கூறுவோம். ஏனென்றால், இவை நாள்பட்ட வியாதியாக இருந்து உடலின் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். உங்களுக்குத் தெரியாமலேயே ரத்த சர்க்கரை 200-க்கு மேல் உங்களுக்கு இருக்கிறது என்றால் 5 ஆண்டுகளில் நீங்கள் 60% நரம்பு பாதிப்புக்கு ஆளாகியிருப்பீர்கள். நரம்பு மட்டுமல்ல... சிறுநீரக பாதிப்பு, கண் பாதிப்பு ஆகியவையும் நீரிழிவின் காரணமாக ஏற்படும். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கான சாத்தியத்தை நீரிழிவு அதிகப்படுத்தும்.
இப்படியான நிலையில் தொடக்கத்திலேயே நீரிழிவைக் கண்டறிவதன் மூலம், இதுபோன்ற பாதிப்புகளையெல்லாம் தவிர்க்க முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிவதன் இன்னொரு சாதகம் என்னவென்றால் மருந்தில்லாமலேயே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குணப்படுத்த முடியும். முறையற்ற உணவுப் பழக்கம், தூக்கமின்மை மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களின் விளைவாகத்தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

எனவே நீரிழிவை ஆரம்பத்திலேயே கண்டறிகையில் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் 5 – 8 சதவிகித உடல் எடையைக் குறைக்கச் சொல்வோம். சரியான உணவுப் பழக்கம் மற்றும் நேரத்துக்கு தூக்கம் என வாழ்க்கை முறையை ஒழுங்குப்படுத்துவதன் மூலம் நீரிழிவை குணப்படுத்த முடியும்.
மரபு வழியே நீரிழிவுக்கு ஆளாகுபவர்களுக்குக் கூட இது போன்ற முறையான வாழ்வியல் மாற்றத்தின் வழியாக நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இது போன்ற நன்மைகள் பலவும் இருப்பதால் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனைக்குச் செல்லுங்கள்” என்கிறார் முத்துக்குமரன் ஜெயபால்.
மேலும் படிக்க How To: நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி? |How To Recognize The Symptoms Of Diabetes?