மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் அதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் பிரதான மற்றும் ஆளுங்கட்சியான தி.மு.க-வும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. இதன் முன்னோட்டமாக அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தை தலைமை நடத்தி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரத்திலும், திருச்சியிலும் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இதன் தொடர்ச்சியாக, மேற்கு மண்டல தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திருப்பூரை அடுத்த காங்கேயம் அருகே உள்ள படியூரில் இன்று (செப். 24) நடைபெற உள்ளது.

ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 300 பேர் வீதம், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களிலுள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட சுமார் 15 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 30 ஆயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கூட்டத்துக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பயிற்சிக் கூடம், உணவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள் என 50 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள், முகவர்கள் என அனைவருக்கும் கூட்டம் நடைபெறும் திடலிலேயே சைவம், அசைவம் என உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இதற்காக 24 அசைவ உணவு நுழைவு வாயில்களும், 12 சைவ உணவு நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,000 கிலோ மட்டனில் பிரியாணியும், 3,000 கிலோ சிக்கனில் கிரேவியும், தனியாக எலும்புக் குழம்புடன் உணவு தயாரிக்கப்படுவதாக தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 10 மணிக்கு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் தொடங்குகிறது. சட்டப்பேரவைவாரியாக வாக்குச்சாவடி முகவர்களுக்கு கியூ-ஆர் கோடுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் நுழைவாயிலில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்த பின்னர்தான், உள்ளே அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு தலைப்பின்கீழ் தி.மு.க பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், எம்.பி இளங்கோ உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பயிற்சி அளிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியில் பேசுகிறார். முதல்வரின் வருகையையொட்டி, ஐ.ஜி பவானீஸ்வரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க 2,000 கிலோ மட்டன், 3,000 கிலோ சிக்கன்; திமுக பயிற்சிக் கூட்டம்... 30,000 பேருக்கு தடபுடல் விருந்து!