புண்ணியமான மாதமாகப் புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தில்தான் திருவேங்கடமுடையான் அவதாரம் செய்தார். எனவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரியது என்பது நம்பிக்கை. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வீட்டில் ஆராதனை செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.
சனிக்கிழமை காலை எழுந்து நீராடி மஞ்சள் வஸ்திரம் அணிந்து கையில் திருநாமம் இட்ட சொம்பினை எடுத்துக்கொண்டு, 'கோவிந்தா கோவிந்தா' என்று உச்சரித்தபடி வீடுவீடாகச் சென்று பிக்ஷை வாங்கி வருவார்கள். பிக்ஷை வாங்கி வந்த அரிசியில் பெருமாளுக்கு சாதம் வடித்துக் கலந்த சாதங்கள் செய்து பின் படையல் இடுவார்கள். இதையே தளிகை இடுதல் என்று சொல்கிறார்கள். பெருமாளுக்குப் படையல் இடும்போது பெருமாள் திருமுகம் போலவே செய்து அதை வணங்குவார்கள். மேலும் அந்த நாளில் வீட்டில் மாவிளக்கு ஏற்றி வணங்கி வழிபட்டு வந்தால் அடுத்த ஓர் ஆண்டும் பெருமாள் நம்மோடு இருந்து நம்மைக் காப்பார் என்பது நம்பிக்கை.

பொதுவாக ஒற்றைப்படை வார சனிக்கிழமைகளில் தளிகையிடுவது வழக்கம். அதாவது 1, 3, 5வது சனிக்கிழமைகளில் படையல் இடலாம். இந்த ஆண்டு இன்று (23.9.23) முதல் சனிக்கிழமை வருகிறது. அதன்பின் 7.10.23 அன்று மூன்றாவது சனிக்கிழமை வருகிறது. இந்த இரண்டு நாள்களுமே தளிகையிட உகந்த நாள்களே. சிலர் இந்த நாள்களில் அஷ்டமி, நவமி வருகிறதே என்று கேட்கிறார்கள். பெருமாள் வழிபாட்டுக்கு எல்லா நாள்களும் உகந்த நாள்களே. எனவே அதற்கு அஷ்டமி நவமி பார்க்கத் தேவையில்லை.
ஆனால் 30.9.23 முதல் மகாளய பட்சம் ஆரம்பிக்கிறது. அடுத்த 15 நாள்களும் முன்னோர் வழிபாட்டுக்கு ஏற்றவை. முன்னோருக்குத் தர்ப்பணம் செய்பவர்கள் அந்த நாளில் தளிகை இடுவது வசதியாக இருக்காது. மேலும் தளிகையிடும் பிரசாதத்தை நாம் உட்கொள்ள வேண்டும். தர்ப்பணம் செய்தவர்கள் அந்த உணவை உண்ண முடியாது. எனவே முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுபவர்களாக இருந்தால் அவர்கள் 7.10.23 அன்று தளிகை இடுவதைத் தவிர்ப்பது நல்லது.
அடுத்த சனிக்கிழமை 14.9.23 அன்று வருகிறது. அந்த நாள் மகாளய அமாவாசை. எல்லோருமே முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வார்கள். எனவே அந்த நாளும் தளிகையிட உகந்ததல்ல. அப்படியானால் என்றுதான் தளிகையிட்டுப் பெருமாளை வழிபடுவது என்று கேட்பவர்களுக்காகவே வருகிறது புரட்டாசி திருவோண நட்சத்திரம்.

புரட்டாசி திருவோணம் பெருமாள் அவதார நட்சத்திரம். பல பெருமாள் கோயில்களில் அந்த நாளில் அன்னப்பாவாடை உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு திருவோணம் 25.9.23 அன்று திங்கட்கிழமையில் வருகிறது. அந்த நாளில் பெருமாளுக்குத் தளிகையிட்டு மாவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. எனவே இன்று அல்லது 7.10.23 அன்று தளிகையிட்டு வழிபட முடியாதவர்கள் 25.9.23 அன்று வழிபாடு செய்வது சிறப்பு.
பெருமாளுக்குத் தளிகையிட்டு வழிபாடு செய்தால் வாழ்வில் அன்னத்துக்குப் பஞ்சமே வராது. வாழ்வில் சகல நன்மைகளும் நம்மைத் தேடிவரும் என்பார்கள் பெரியோர்கள். அந்த ஏழுமலையானின் கருணை நம்மோடு எப்போதும் இருக்கும்.
மேலும் படிக்க இந்தப் புரட்டாசியில் பெருமாளுக்குத் தளிகையிட உகந்த 3 விசேஷ தினங்கள் இவைதான்!