மும்பை அருகில் உள்ள தானே பால்கும் என்ற இடத்தில் 40 மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப்பணி முடிந்து கட்டடத்தில் உள்கட்டமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. பொருள்கள் எடுத்துச்செல்லவும், தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கும் தற்காலிக லிஃப்ட் ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது. அது நேற்று மாலையில் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதியில் வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தம் ஏற்பட்டது.
`தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தனர். அவர்கள் 40-வது மாடியில் இருந்து தற்காலிக லிஃப்டில் கீழே வந்த போது லிஃப்ட் அறுந்து விழுந்தது’ என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

லிஃப்ட் கீழே விழுந்த வேகத்தில் அதில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஒருவர், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். மேலும் 2 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பில்டர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அறுந்து விழுந்த லிஃப்ட் கடந்த மாதம் 23-ம் தேதிதான் பழுதுபார்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லிஃப்ட் அறுந்து விழுந்த போது பக்கத்து கட்டடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் இது குறித்து கூறுகையில், ''நான் பக்கத்து கட்டடத்தில் நின்று கொண்டிருந்த போது வெடிகுண்டு வெடித்தது போன்ற ஒரு சத்தம் கேட்டது. ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதன் பிறகுதான் லிஃப்ப்ட் அறுந்துவிழுந்துவிட்டதாக தெரிந்து கொண்டேன்'' என்று தெரிவித்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க மும்பை: 40-வது மாடியிலிருந்து அறுந்து விழுந்த லிஃப்ட் - 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு