இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் , அமைப்பினர், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இம்மானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழக அரசு சார்பில் உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ``இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென முதலமைச்சரிடம் அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி ரூ.3 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் சமூக நீதியை பாதுகாக்க போராடினார். நாமும் சமூக நீதியை காக்க போராட வேண்டும்” எனக் கூறினார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ``அ.தி.மு.க ஆட்சியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும். தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் வெளியேற்றம் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில் இமானுவேல் சேகரன் நினைவாக மணிமண்டபம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர்கள் சொன்னதை செய்வது இல்லை. பழனிசாமி ஆட்சியில் தான் அதுவும் நடக்கும்.

தி.மு.க சொல்ல மட்டுமே செய்யும், அ.தி.மு.க தலைமையிலான அரசு வந்த பிறகு அது நிறைவேற்றப்படும், அரசு விழாவாகவும் அறிவிக்கப்படும்" என்றார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தங்களைப் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என தேவேந்திர குல வேளாளர்கள், மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். கோரிக்கை நிறைவேற்றப்படும். அதற்கு உதவுவோம், அதுவரை காத்திருப்போம்" என தெரிவித்தார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், "தமிழக அரசு இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறது. இதனை அறிவிப்போடு நின்று விடாமல், அதற்கான பணிகளை தொடங்க வேண்டும்” என கூறினார்.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3 டி.ஐ.ஜி, 25 எஸ்.பி, 30 ஏ.டி.எஸ்.பி, 70 டிஎஸ்.பி மற்றும் உள்ளுர் தவிர பிற மாவட்டங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட 166 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி பரமக்குடி முழுவதும் 200 கண்காணிப்பு கேமராக்கள், 7 ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
மேலும் படிக்க இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: `திமுக சொல்லும்; அதிமுக தான் செயல்படுத்தும்” - ஆர்.பி உதயகுமார்