கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
``ஆணித்தரமான உண்மை. தேர்தலுக்கு முன்பாக ‘தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம்’ என்றார்கள். தமிழ்நாட்டில் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 26,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இருந்தால்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவே முடியும். ஆனால், தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்தப் பொய்யான வாக்குறுதியைத் தெரிந்தே அளித்தார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகத் திட்டத்தைச் செயல்படுத்தாதவர்கள், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது என்றதும், அரசின் பல்வேறு துறைகளிலிருந்தும் பல திட்டங்களை நிறுத்திவிட்டு, இந்தத் திட்டத்துக்கு நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அதிலும் ‘தகுதியானவர்கள்’ என்று ஒரு வார்த்தையைக் கொண்டு வந்து சொற்பமான நபர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பணம் சென்று சேர்ந்ததா என்பதே இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. நகைக்கடன் தள்ளுபடியிலும் இதையேதான் செய்தார்கள். ‘அனைத்து நகைக்கடனையும் தள்ளுபடி செய்வோம்’ என்று சொல்லிவிட்டு, மொத்தமிருந்த 48 லட்சம் கடன்களில், சுமார் 35 லட்சம் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று அறிவித்தனர். பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க-வுக்கு நிகர் தி.மு.க-தான்.’’

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
``செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடுதான் இது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்களை வழங்கினார்களே... அதை யெல்லாம் தேர்தல்களை மனதில் வைத்தே கொடுத்தார்கள் என்று நாங்கள் இழிவுபடுத்தியதுண்டா... சொத்தில் சம உரிமை தொடங்கி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் வரை பெண்களின் முன்னேற்றத்துக்குப் பல திட்டங்களைக் கொண்டுவந்தது தி.மு.க. தற்போது மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக் கிறார்கள். ஆனால், உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை என்றோ கொண்டுவந்து சாதித்தது தி.மு.க. அதன் தொடர்ச்சிதான் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத்தொகை திட்டங்கள். இத்தனை நாளாக 1,000 ரூபாய் கொடுக்கவில்லை என்றார்கள். தற்போது தளபதி ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். இனி என்ன செய்வது என்று புரியாத அ.தி.மு.க-வினரது புலம்பலின் வெளிப்பாடு தான் இது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காகத் தமிழ்நாடு அரசின் எந்த ஒரு திட்டமும் நிறுத்தப்படவில்லை. மாநிலத்தின் நிதி நிலையை மிக மோசமாக மாற்றிவைத்தது மட்டுமன்றி, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தொகையைக்கூட தள்ளுபடி செய்யாமல், அவர்களிடம் வட்டிக்கு வட்டி வசூல் செய்த அ.தி.மு.க-வினருக்கு இது குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை.’’
மேலும் படிக்க ஒன் பை டூ