சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (19) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரும் காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ராம் (22) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவரும், கடந்த ஆறு வருடங்களாக சமூக வலைதளம் மூலம் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள் காதல் விவகாரம் பிரியாவின் வீட்டிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து பிரியாவை அவரின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள் கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, நாகை மாவட்டம், திருக்குவளை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துள்ளனர். பின்னர் அங்குள்ள கோயிலில் தாலி கட்டியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரியா காணாமல்போனது குறித்து அவரின் பெற்றோர் சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டுத்தரக் கோரியும் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து பிரியாவின் செல்போன் சிக்னல் மூலம் சென்னை போலீஸார் காரைக்காலுக்கு விரைந்து, காதல் ஜோடியைப் பிடிக்க முயன்றுள்ளனர். இதனையறிந்த காதல் ஜோடி, பாதுகாப்பு வேண்டி நிரவி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் நிரவி காவல் நிலைய போலீஸார், `அம்பத்தூர் போலீஸார் உங்களைத் தேடி வருவதால், அவர்களிடம் தஞ்சமடையுங்கள்' என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் செய்வதறியாது தவித்த ஜோடி, தங்களின் நண்பர்களுடன் காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தஞ்சமடைந்தனர்.
சென்னை போலீஸார் காரைக்கால் நீதிமன்றத்துக்குள் நுழைந்து, பெண்ணை அழைத்தச் செல்ல முயன்றபோது, அவர்களுடன் செல்ல மறுத்து கூச்சலிடவும், அங்கிருந்த வழக்கறிஞர்கள் `என்ன பிரச்னை?' என கேட்டபோது, பிரியா விளக்கமாகக் கூறியுள்ளார். அதையடுத்து தமிழக போலீஸாரை தடுத்த காரைக்கால் வழக்கறிஞர்கள், `இருவரும் திருக்குவளையில் பதிவு திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பிரிக்க முடியாது' எனக் கூறி, பதிவு திருமணம் குறித்த ஆவணங்களை அளித்ததையடுத்து, தமிழக போலீஸார் சென்னை திரும்பினர்.

மேலும் சென்னை போலீஸாருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், அவரின் கழுத்து, காதில் இருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை நடுரோட்டிலேயே அவரிடமிருந்து பெற்றுச் சென்றனர். காதல் திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடிக்கு நிரவி காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில், காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம்; நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த ஜோடி... காரைக்காலில் பரபரப்பு!