நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே இருக்கிறது கொமராபாளையம். இந்த ஊராட்சியில் இருக்கும் கீழ்பாலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி வரதம்மாள். செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பாண்டியன் (55) என்ற மகனும், சியாமளா (48) என்ற மகளும் உள்ளனர். இதில், கூலி தொழிலாளியான பாண்டியனுக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்று, இரண்டு மனைவிகளுடன் மணப்பள்ளி பகுதியில் வசித்து வந்தார். அதேபோல், அவரது தங்கையான சியாமளாவிற்கும் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வரதம்மாள் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர்களின் தாயாரான வரதம்மாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வயோதிக காரணமாக இறந்து விட்டார்.

இதனால் பாண்டியன் கீழ்பாலப்பட்டிக்கு வந்து தாயாருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, தங்கையுடன் தங்கி இருந்தார். இதனிடையே, அண்ணன், தங்கை இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் தாய் இறந்த நாளில் இருந்து அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடித்து வந்தனர். அதன்படி, நேற்று முந்தினமும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வர, அதன்பின்னர் பாண்டியன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கியிருக்கிறார்.
அதேநேரம், தனது அண்ணன் மீதான கோபம் குறையாமல் இருந்த சியாமளா, வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் இரும்பு குழலை எடுத்து பாண்டியன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன், துடிதுடித்தபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்தபடி சியாமளா, தனது சகோதரனான பாண்டியனின் மகனான தனபால் என்பவரிடம், 'உனது தந்தை கீழே தவறி விழுந்து இறந்துவிட்டார். சீக்கிரம் வா' என்று கூறியிருக்கிறார்.
இதனால், அதிர்ச்சியடைந்த தனபால், உடனடியாக கீழ்பாலப்பட்டிக்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது, தனது தலையில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், இதுபற்றி மோகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோகனூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கவேல் வழக்கு பதிவு செய்தார். அதோடு, உடன்டியாக சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், பாண்டியனை கொலை செய்தது அவரது தங்கையான சியாமளாதான் என்பதை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, பாலப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சியாமளாவை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தனது சகோதரரையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க ஒன்றாக மது அருந்திய அண்ணன், தங்கை! - திடீர் சண்டையில் அண்ணனை அடித்துக் கொன்ற தங்கை