வாழ்வில் உங்களுக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய, பணக்காரராக இந்த ஒரு விஷயத்தைச் செய்தால் போதும் என மில்லயனரும் எழுத்தாளருமான டேவிட் பாக் (David Bach) கூறியுள்ளார்.
காலம் முழுவதும் உழைப்பவர்கள் அதை எப்படிச் சேமிப்பது என்பது தெரியாமலே வயதான காலத்தில் கஷ்டப்படுகிறார்கள். அதிலும் வீட்டு பிரச்னை, சோற்று பிரச்னை, கடன் பிரச்னை இவற்றையெல்லாம் தாண்டி சேமிப்பு என்பது சாத்தியமா எனக் கேள்வி எழலாம்.

ஆனால், சில நேரங்களில் வாழ்வில் பொருளாதார ரீதியாகச் சாதித்தவர்களின் அறிவுரைகள் நமக்கு உதவலாம். அந்தவகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரும், மில்லியனருமான டேவிட் பாக் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் நீங்கள் பணக்காரராக முடியும், அதோடு உங்களது நிதி பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
அதாவது, ``ஒருவர் தனது வருமானத்தில் குறைந்தபட்சம் 14 சதவிகிதத்தை தனக்கென ஒதுக்க வேண்டும். பொதுவாகவே ஒருவரது வாழ்நாளில் 35 ஆண்டுகள் (சுமார் 90,000 மணிநேரம் வரை) வேலை செய்கிறார்கள். அப்படியெனில் உங்களது வருமானத்தில் ஒரு நாளில் ஒரு மணிநேரத்திற்கு உங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தையாவது உங்களுக்காக வைத்திருக்க வேண்டும்.
முதலில் உங்களுக்கு நீங்களே பணம் கொடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் உங்களது ஒரு நாள் வருமானத்தில் முதல் ஒரு மணிநேர வருமானம் என்பது உங்களுக்கானது. உதாரணத்திற்கு நீங்கள் காலையில் 9 மணிக்கு வேலையைத் தொடங்குகிறீர்கள் என்றால் 9 மணி முதல் 10 மணி வரை உங்களுக்கான நேரம், அது உங்களது தொகை. இதை ஆட்டோமேடிக்காக மாற்றுங்கள்.

இப்படி உங்களது ஓய்வூதிய கணக்கில் ஒரு நாளின் ஒரு மணி நேர வருமானத்தைச் சேர்த்து வைத்து வரும்பட்சத்தில் உங்களிடம் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் டாலர்கள் வரை இருக்கும்.
பொதுவாகவே ஒரு நபரின் வருமானம் என்பது வாடகை, வரி, ஆரோக்கியம், உணவு, கிரெடிட் கார்டு மற்றும் போக்குவரத்து செலவுகளுக்குச் செல்கிறது. இத்தனை செலவுகளுக்குப் பின்னர் பெரும்பாலான மக்களிடம் சேமிப்புக்கு போதுமான பணம் இல்லை.
ஆனால் நீங்கள் உங்களுக்கு முதலில் பணம் செலுத்திக் கொண்டால், உங்கள் வருமானத்தில் பணம் பெரும் முதல் மனிதராக நீங்கள் மாறுகிறீர்கள்'' என்று கூறியுள்ளார்.
தினசரி வேலையில் முதல் ஒரு மணி நேர பணம் என்பது உங்களுக்கானது என்பதை எப்படி பார்க்கீறீர்கள். அந்த பணத்தை உங்களால் சேமிக்க முடியுமா?!
மேலும் படிக்க `இந்த ஒரு விஷயம் போதும்': வேலையில முதல் 1 மணி நேர வருமானம் உங்களுக்கு!| #எக்ஸ்பர்ட் அட்வைஸ்...