`தன்பாலின (பால் புதுமையர்) திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பால் இந்தியாவில் மொத்தமுள்ள 14 கோடி பால் புதுமையர்கள்(QUEER) ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகள் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றன. அதேபோல இந்தியாவும் அங்கீகரிக்க வேண்டும் எனக்கோரி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து நிலுவையில் வைக்கப்பட்டிருந்த இந்த வழக்குகளை கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாதாடிய மத்திய அரசு, ``ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்வது என்பது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல. கணவன் ஆணாகவும் மனைவி பெண்ணாகவும் இருந்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆகியோரையே குடும்பமாக அங்கீகரிக்க முடியும். ஒரே பாலினத்தவர்கள் இணைந்து உடலுறவு கொள்வது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்ததால், நாட்டின் சட்டங்களின்கீழ் ஒரே பாலின திருமணம் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. தன்பாலின ஈர்ப்பாளர் திருமணங்களை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை. அதே வேளையில் அந்தத் திருமணங்களுக்கு எதிராக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது" எனத் திட்டவட்டமாகக் கூறியது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, ``தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. நீதிபதிகள் இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். தன்பாலின திருமணம் என்பது அடிப்படை உரிமையாகாது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும். தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்குச் சட்டரீதியாக அங்கீகாரம் அளிக்கும் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதை சட்டப்பேரவையோ அல்லது நாடாளுமன்றமோ மட்டுமே செய்ய முடியும். நீதித்துறை தீர்ப்பால் அல்ல!" எனத் திட்டவட்டமாகத் தன்பாலின திருமணம் தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது என்று தனது பிரமாணப் பத்திரத்தில் மத்திய பா.ஜ.க அரசு தெரிவித்தது.

அதுமட்டுமல்லாமல், `தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும். திருமணச் சட்டங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுவதால் மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்பது அவசியம்!' எனவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதடியது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சகம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக, 10 நாள்களுக்குள் மாநில அரசுகள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது.
அதைத்தொடர்ந்து கடந்த மே மாதத்தில் ராஜஸ்தான் மாநிலம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் இந்த விவகாரம் குறித்து ஆராய கூடுதல் அவகாசம் கேட்டன. பலகட்ட விசாரணை முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் அக்டோபர் 17-ம் தேதி தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை அளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ``தன்பாலின (பால் புதுமையர்) திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் வேதனையும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்றனர்.
இனி தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு அமைக்கும். அந்த குழு சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையின்படி இந்த விவகாரத்தில் எதிர்கால முடிவுகள் எட்டப்படும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க `தன்பாலின திருமண அங்கீகாரம்... கைவிரித்த உச்ச நீதிமன்றம்' - காத்திருக்கும் 14 கோடி பால் புதுமையர்கள்