`பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்கிறோம்' என அண்மையில் அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் அவ்வாறே கூறிவருகின்றனர். இருப்பினும், `பா.ஜ.க - அ.தி.மு.க முறிவு நிரந்தரமானது அல்ல, தேர்தலுக்கு இன்னும் நாள்கள் இருக்கிறது' என அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். அதற்கேற்றாற்போல, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும், `இந்த விவகாரத்தில் தேசிய தலைமை முடிவுசெய்யும்' என்று கூறி ஒதுங்கிவிட்டார்.

போதாக்குறைக்கு, 2024-ல் பிரதமர் வேட்பாளராக அ.தி.மு.க யாரை முன்னிறுத்தும் எனும் கேள்விக்கு, `தேர்தலில் வெற்றிபெற்று தமிழக நலனுக்ககாக நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவோம்' எனக் கூறிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படியான சூழலில்தான், ``2024 தேர்தல் என்பது மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டி" என்று சமீபத்தில் அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இத்தகையப் பேச்சைத் தொடர்ந்து, 2024 தேர்தல் எந்தக் கட்சிகளுக்கிடையிலான போட்டியாக இருக்கும், என்று விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி என அண்ணாமலை கூறியிருக்கும் நிலையில், எந்த கட்சிகளுக்கு இடையே தீவிரப் போட்டி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்கப்பட்டது. கூடவே, `அ.தி.மு.க - பா.ஜ.க, தி.மு.க - அ.தி.மு.க, தி.மு.க - பா.ஜ.க' என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி `அதிகபட்சமாக 75 சதவிகிதம் பேர் தி.மு.க - அ.தி.மு.க இடையே தீவிரப் போட்டி இருக்கும்' என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, `21 சதவிகிதம் பேர் தி.மு.க - பா.ஜ.க' என்றும், `4 சதவிகிதம் பேர் அ.தி.மு.க - பா.ஜ.க' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில், அ.தி.மு.க-வின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்த வண்ணமே இருக்கிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட, இதுபற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியபோது, `இதில் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமையில்லை. இருக்கை விவகாரம் எனது தனிப்பட்ட உரிமைக்கு உட்பட்டது' என்று கூறி அவையிலிருந்து அ.தி.மு.க-வை வெளியேற்றினர் அப்பாவு.

இந்த நிலையில், விகடன் வலைதளப் பக்கத்தில் அ.தி.மு.க-வின் கோரிக்கையை அப்பாவு தொடர்ச்சியாக நிராகரிப்பது குறித்து கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள, பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்... https://www.vikatan.com/
மேலும் படிக்க திமுக, அதிமுக, பாஜக... 2024 தேர்தல் யாருக்கிடையிலான போட்டியாக இருக்கும்? | விகடன் கருத்துக்கணிப்பு