தங்கத்துக்கும், இந்தியர்களுக்கும் இடையேயான உறவு பல நூற்றாண்டுகள் பழைமையானது. காலம் காலமாக இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர். தீபாவளி, அட்சய திருதியை போன்ற பண்டிகை நாள்களில் கொஞ்சமாவது தங்கத்தை வாங்கி வைக்கின்றனர்.

தங்கத்தை ஒரு சேமிப்பாக மட்டுமல்லாமல், அந்தஸ்துக்கான பொருளாகவும் இந்திய மக்கள் பார்க்கின்றனர். தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும்கூட, நகைக் கடைகளில் தங்க நகைகளின் வியாபாரம் அனல் பறக்க நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நகைகளைப் பொறுத்தவரை, தங்கத்தைவிட வைரங்கள் அந்தஸ்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதுமே ஆடம்பரப் பிரியர்களுக்கு வைரம் மீது கிராக்கி உண்டு. ஆனால், தங்கத்தைவிட வைரம் விலை உயர்ந்தது என்பதால், இத்தனை காலமும் அதை பலரும் வாங்காமலே தவிர்த்து வந்தனர்.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. வைரம் விரும்பிகளுக்கு மிகக் குறைந்த விலையில் வாங்குவதற்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது வைரத்தின் விலை மிக மிகக் கடுமையாக இறங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலைக்கு வைரம் இறங்கி வந்திருக்கிறது.
சர்வதேச பொருளாதார மந்தநிலையின் விளைவாக, கடந்த சுமார் ஒன்றரை ஆண்டு காலத்தில் வைரத்தின் விலை சுமார் 35% குறைந்துள்ளது. இது மட்டுமல்லாமல், செயற்கையாக உருவாக்கப்படும் வைரங்களாலும் அண்மைக்காலமாக வைரத்தின் விலை குறைந்து வருகிறது.
குறிப்பிட்ட சில ரக வைரங்களின் தற்போதைய விலை, 2000-ஆம் ஆண்டில் இருந்த விலை அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், வைரத்தை வாங்குவதற்கு தற்போது மிக அட்டகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இயற்கை வைரங்களுக்குத்தான் காலம் காலமாக மவுசு இருந்து வந்தது. செயற்கை வைரங்கள் உற்பத்தியில் இப்போது தொழில் துறையினர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இயற்கை வைரங்களின் விலையே கணிசமாக குறைந்து விட்டது.
குறிப்பாக, ஒற்றை வைரங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறைந்த விலைக்கு ஒற்றை வைரங்களை வாங்குவதற்கும் தற்போது உகந்த காலம் உருவாகியுள்ளது.
உதாரணமாக, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒற்றை வைரங்கள் இப்போது சுமார் 3 லட்சம் ரூபாய்க்கே தள்ளுபடி விலையில் விற்பனையாகி வருகின்றன. அதாவது, கிட்டத்தட்ட 70% தள்ளுபடி விலைக்கு வைரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வைரங்களின் தற்போதைய விலை இன்னும் பல காலத்துக்கு நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சொல்லப்போனால், மீண்டும் வைரம் விலை உயர்ந்துவிடும் என நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் காஸ்ட்லியான வைரங்களை குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர் மக்கள்.
நீங்க வைர நகை வாங்கப் போறீங்களா?
மேலும் படிக்க தங்கத்தை விடுங்க; வைரம் விலை 70% குறைவு! இப்போது வாங்க சூப்பர் வாய்ப்பு!