ஆவின் அலுவலர்களுக்கான பயிற்சியை மதுரையில் தொடங்கி வைத்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஆவினில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆவினில் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்களின் போட்டியை முறியடிக்க முடியும்.

தற்போது கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வசதிகள், பராமரிப்பதற்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாதம் பல்லாயிரக்கணக்கான கறவை மாடுகள் வாங்க கடன் வழங்க உள்ளோம்.
நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம்.
ஆவினில் முறைகேடு செய்தவர்கள், தப்பிக்க முடியாது. எங்களுடைய லஞ்ச ஒழிப்புத்துறையினர் எங்கு தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.
தீபாவளிக்கு 15 நாள்களுக்கு முன்பே, நெய் உள்ளிட்ட பொருள்கள் அதற்கான உற்பத்தியை தொடங்கி மக்களுக்கு தாராளமாக வழங்கப்படும். கடந்த மாதம் ஆவினில் எட்டு சதவிகிதம் விற்பனை உயர்ந்துள்ளது.
ஆவினில் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் கடிதம் மூலமாகவோ, நேரில் வந்தோ என்னிடம் புகார் தெரிவிக்கலாம், உடனே தீர்வு காணப்படும்" என்றார்.

அமைச்சர் இப்படி பேசியுள்ள அதே நாளில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துளளது ஏமாற்று வேலை என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு இது வரை இல்லாத அளவிற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் கடைசி நேரத்தில் ஒரு நாளுக்கு 38 லட்சம் முதல் 40 லட்சம் லிட்டர் வரை ஆவினுக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது தினசரி 25 லட்சம் லிட்டர் என குறைந்துவிட்டது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்த நிலையில் பல சங்கங்கள் இழுத்து மூடும் நிலை உருவாகியுள்ளது. திமுக அரசு வந்த புதிதில் 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்தனர். இதன் மூலம் ஆவினுக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக பால் கொள்முதலை விரிவுபடுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு நீண்ட போராட்டம் நடத்தியதற்குப்பின் பால் கொள்முதலுக்கு 3 ரூபாய் மட்டுமே உயர்த்தினார்கள். லிட்டருக்கு 10 ரூபாய் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

வண்டிகளில் ஏற்றும்போதே பாலின் தன்மைகளை ஆய்வு செய்து பால் உற்பத்தியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும், ஆவினுக்கு கொண்டு வரும் வழியில் தண்ணீர் கலக்கப்படுவதால் உற்பத்தியாளர்களுக்கும், சங்கத்தினருக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆவின் அலுவலகங்களிலும், கலெக்டர் அலுவலகங்களிலும் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
பாலின் தன்மை அடிப்படையில் கொள்முதல் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார், அது ஏமாற்று அறிவிப்பு, உண்மை இல்லை.
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 90 சதவிகித பால் உற்பத்தியாளர்களின் பாலில் இந்த சத்துகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. 8.0 எஸ்எல்எப், 4.0 கொழுப்பு என்ற சத்து மட்டுமே உள்ளது, இல்லாத சத்திற்கு அமைச்சர் விலையை அறிவிக்கிறார்.
எருமை மாடுகள், நாட்டு மாடுகளிடம் மட்டுமே இருந்த, இது போன்ற சத்துக்கள் 1990 க்கு பின் அழிந்துவிட்டது. இப்போது தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலில் கலப்பின மாடுகளைத்தான் அனைவரும் வைத்துள்ளனர்." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க "அமைச்சர் மனோ தங்கராஜின் அறிவிப்பு ஏமாற்றுத்தனமானது!"-பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் காட்டம்