திருவள்ளூரில் கடந்த 1-ம் தேதி வட்டார, நகர வாக்குச்சாவடி நிர்வாகிகள் பயிற்சி பாசறை மாநாடு நடந்தது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். அப்போது பேசிய திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார், "என்னுடைய விருப்பம் நான் எங்கிருக்கிறேனோ அது காங்கிரஸாக இருக்க வேண்டும். அதற்காக என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். இதுதான் எனது பயணத்தின் நோக்கம். இதில் குறுக்கிடுபவர்களை, எப்படி மதம் பிடித்த யானை இடித்து தள்ளிவிட்டு ஓடுகின்றதோ, அந்த பாணியிலே தான் எனது செயலும் இருக்கும். வாக்குச்சாவடி இல்லாவிட்டால் எந்த கட்சியும் உருப்பிடாது.

எந்த கட்சியும் ஜெயிக்காது. நாங்கள் தான் பெரிய கட்சி என்று எந்த கட்சி சொல்லிக்கொண்டாலும், அந்த கட்சி வளமான வாக்குச்சாவடி இல்லாவிட்டால் இருக்கவே முடியாது. இதை நான் மிகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். வாக்குச்சாவடி உறுப்பினர்கள் இல்லாமல் தேர்தலில் நிற்பதே கடினம். இதைத்தான் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு நேரத்திலும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதை உணர்ந்தவன் நான்... அடிபட்டவன் நான். சரியான வாக்குச்சாவடிகள் இல்லாத காலத்தில் 7,8 தேர்தல்களில் எவ்வளவு அவதிப்பட்டேன் என்பதை உணர்ந்திருக்கிறேன். எனவே தான் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வாக்குச்சாவடிகளை அமையுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
கும்மிடிப்பூண்டியில் 80%, பொன்னேரி 79%, திருவள்ளூரில் 57%, பூந்தமல்லியில் 73%, ஆவடியில் 93%, மாதவரத்தில் 100 சதவீதம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் கே.எஸ்.அழகிரி என்னை அழைத்து, 'தமிழகத்தில் நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரையைக்கு நீங்கள் பொறுப்பெடுத்து கொள்கிறீர்களா?' எனக்கேட்டார். அதற்கு நான், 'கரும்பு தின்ன கூலி கேட்க வேண்டுமா... இதுபோன்ற வேலையை கொடுங்கள்' என்று கூறிவிட்டு அந்த பணியை செய்தேன். கன்னியாகுமரியில் தொடக்கி கர்நாடக வரையில் சென்று விட்டுவிட்டு வந்தேன்.

நாட்டின் நடப்பு சரியில்லை, ஆள்பவர்கள் சரியில்லை. மதசார்பின்மை, மதவெறி அதிகமாக தலை தூக்குகிறது என்பதற்காக தான் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டார். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் நமது அணி தான் வெற்றி பெற வேண்டும். மதத்திற்கு, மதம் மோதவிட்டு, மக்கள் மத்தியில் சண்டையை ஏற்படுத்தி ஒரு கொலைகாரக் கூட்டம் இன்னும் இந்தியாவிலே கோலோச்சிக்கொண்டு இருக்கிறது. இனியும் அதை பார்த்துக்கொண்டு இருப்பதற்கு அவகாசம் கிடையாது. அவர்கள் உருப்படியான விஷயத்தை பேசியது கிடையாது. நீ யார் இந்து மதத்தை பற்றி பேசுவதற்கு?" என கொதித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "சனாதன எதிர்ப்பை இன்று இவர்கள் தவறாக கூறுகிறார்கள். சனாதனத்தை பற்றி பேசினால் இந்து மதத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். அது தவறு. காங்கிரஸ் கட்சி கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை உடைய கட்சி. அதற்காக மதம், சாதி, மொழியின் பெயரால் காங்கிரஸ் அரசியல் செய்யாது. என்னை சனாதன எதிர்ப்பை பேசாதீர்கள் என்கிறார்கள். அதற்கு நான் 25 ஆண்டுகளாக பேசுகிறேன். அண்ணாமலை பல்கலையில் படித்த பொழுதே நான் இதை பேசினேன். அன்றும் பேசினேன்... இன்றும் பேசுகிறேன்... நாளைக்கும் பேசுவேன்... நாங்கள் பேசுவோம்... பேசுவோம்... பேசிக்கொண்டே இருப்போம்... சீர்திருத்தப்பட்ட, பரிசுத்தமான இந்து மதத்தை நாங்கள் முன்னிறுத்துகிறோம். மக்களை, மக்களாக நேசிக்கக்கூடிய இந்து மதத்தை நாங்கள் முன்னிறுத்துகிறோம்" என்றார்.

பின்னர் இந்த கூட்டம் தொடர்பாக நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், "தண்டவாளத்தை போல தமிழ்நாடு காங்கிரஸையும், சர்ச்சையும் பிரிக்க முடியாததாகி விட்டது. திருவள்ளூரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தை, வழக்கம் போல புறக்கணித்திருக்கிறார்கள், முக்கிய தலைவர்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன், செல்வப்பெருந்தகை, செல்லகுமார் என தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வழக்கம் போல் ஆப்சென்ட். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஆலோசனை கூட்டம் என அனைத்திற்கும் தாமதமாக வரும் கே.எஸ். அழகிரியும், தனது வழக்கமான பாணியை மாற்றிக்கொள்ளவில்லை. இதேநிலை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்படும். எனவே அனைவரும் ஒன்றிணைத்து பணியாற்ற வேண்டும். மாநில தலைவர் விவகாரத்தில் காங்கிரஸ் டெல்லி தலைமை முடிவெடுக்காமல் இருப்பதும் இங்கு சர்ச்சைகளுக்கு காரணம். அனைத்து நிர்வாகிகளும் ஏற்கும் வகையில் தலைமை குறித்த முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழத் தொடங்கியுள்ளது" என்றனர் வேதனையாக.
மேலும் படிக்க 'புறக்கணித்த தலைவர்கள்... தாமதமாக வந்த அழகிரி' - சர்ச்சையான திருவள்ளூர் காங்கிரஸ் நிகழ்ச்சி!