கடந்த 7-ம் தேதி முதல் இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு மத்தியில் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் பரவிவரும் இந்தப் போரின் தாக்கம் தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இருக்கிறது. `ஹமாஸை இந்த பூமியிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறிவோம். போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை' என்ற ஆவேசத்துடன் இஸ்ரேல் நடத்தும் இந்தத் தாக்குதலில், காஸாவில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 2,750-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மேலும், காஸாவில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திவருகிறது இஸ்ரேல். இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அங்குப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது. எனினும், அந்த தீர்மானத்தில் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், ``இஸ்ரேல் - காஸா இடையே வன்முறை மேலும் தீவிரம் அடையாமல் இருக்க ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், இரு தரப்புக்கும் இடையேயான இந்தத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்தும் ரஷ்ய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமரிடம் எடுத்துரைத்தார். இஸ்ரேலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை அதிபர் புதின் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படுவதன் அவசியத்தையும், மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினார். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண இரு தரப்பும் அரசியல் மற்றும் தூதரகரீதியில் செயல்பட வேண்டும் என்பதையும் அதிபர் விளாடிமிர் புதின் விளக்கினார்" என்று தெரிவித்திருக்கிறது.
ரஷ்ய அதிபர் புதினுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி வழியே பேசியதாகக் கூறும் இஸ்ரேல் தரப்பு, தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``கொடூரக் கொலைக்காரர்களால் இஸ்ரேல் தாக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ மற்றும் ஆட்சி நிர்வாகத்தை அழித்தொழிக்கும் வரை தாக்குதல் தொடரும். இதில், இஸ்ரேல் ஒன்றுபட்டு உறுதியாக இருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் வரை இஸ்ரேலிய ராணுவம் ஓயாது" எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க நெதன்யாகுவுடன் பேசிய புதின்; ``ஹமாஸ் அழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்!'' - இஸ்ரேல் திட்டவட்டம்!