"எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இனி வேலை செய்ய போவது கிடையாது!" - கடந்த மே மாத தொடக்கத்தில் இந்த உறுதிமொழி அமெரிக்கத் திரை எழுத்தாளர்களால் எடுக்கப்பட்டது. சுமார் 11,500 எழுத்தாளர்கள் அமெரிக்க வீதியில் இறங்கி வேலை நிறுத்தப் பதாகைகளைத் தூக்கிக் கொண்டு நெட்பிளிக்ஸ் தொடங்கி ஏ.ஐ வரை தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன் விளைவு அமெரிக்க டிவி ஷோக்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டன.

The Last of us, The Abbot Elementary, Stranger Things, The Penguin, The Old man போன்ற பிரபலமான வெப் தொடர்களின் அடுத்த பாகங்கள் வெளியாவதில் ஏற்படும் சிக்கல் தொடங்கி, Gladiator - 2, Dune 2, Mission Impossible - Dead Reckoning Part 2, Deadpool - 3, Spider-Man: Beyond the Spider-Verse என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஹாலிவுட் படங்களும் ஸ்தம்பித்து நிற்கும் சூழல் உருவானது.
யார், யாரை எதிர்த்தார்கள்?
ஹாலிவுட்டில் பணியாற்றும் பெரும்பாலான எழுத்தாளர்களைக் கொண்ட தொழிலாளர் சங்கமான `ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா (WGA)' இந்தப் போராட்டத்தை நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம், வார்னர் ப்ரதர்ஸ், டிஸ்னி, பேரமவுண்ட் ஆகிய பெருநிறுவனங்களை உள்ளடக்கிய Alliance of Motion Picture and Television Producers (AMPTP) என்கிற அமைப்பை எதிர்த்து நடத்தியது.

இந்தப் போராட்டத்தில் WGA மிக முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்தது.
- Residual (ஒவ்வொரு முறை தொடர் ஒளிபரப்பப்படும்போது கிடைக்கும் ராயல்டி அல்லது காப்பீட்டு) வருமானத்தை உயர்த்த வேண்டும்;
- தங்கள் படைப்புகள் OTT தளங்களில் எத்தனை பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்;
- எழுத்து பணிகளுக்காகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இதற்கு முன்னர் 2007-ம் ஆண்டு டிவிடி-க்கள் அதிகம் பிரபலமாக, அதற்கும் 100 நாள்கள் போராட்டம் நடந்து கலிபோர்னியா மாகாணத்தில் 2.1 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக இது பார்க்கப்பட்டது. எழுத்தாளர்கள் ஒரு பக்கம் போராட்டத்தைத் தொடங்க, நடிகர் சங்கமும் போராட்டத்தை அறிவித்தது.
அது என்ன நெட்வொர்க் ஷோ? ஸ்ட்ரீமிங் ஷோ?
இந்தச் சம்பவங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் நெட்வொர்க் ஷோவுக்கும், ஸ்ட்ரீமிங் (ஓ.டி.டி) ஷோக்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க எழுத்தாளர்கள். முதலில் நெட்வொர்க் ஷோ என்பது இங்கிருக்கும் சன் டிவி, விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களைப் போல அங்கிருக்கும் ஏபிசி, என்பிசி, சிபிஎஸ் போன்ற சேனல்களில் நேரடியாகத் தொடர்களை ஒளிபரப்புவதாகும். அங்கே ஒரு தொடருக்கான சீசன் செப்டம்பரில் தொடங்கி அடுத்தாண்டு மே வரை 22 அல்லது 23 எபிசோடுகளாக ஓடுகிறது. ஒவ்வொரு எபிசோடுகளுக்கும் 5 விளம்பர இடைவேளைகள் என நிலையான வருமானத்தை ஈட்டித்தரக் கூடியதாக அது இருக்கிறது. இங்கு வேலைக்கான பணிகள் நீண்ட நாள்கள் இருப்பதோடு, ஒரு நிரந்தரமான சம்பளத்தை எதிர்பார்க்கலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கின்றன இந்தத் தொலைக்காட்சி தொடர்கள்.

உதாரணத்திற்கு Law and Order - Criminal Intent தொடரில் ஷோ ரன்னராக வேலை செய்த வாரன், நான்கு வருடக்காலம் அந்தத் தொடரில் வேலை செய்ததற்காக ஒவ்வொரு வாரமும் 15,000 அமெரிக்க டாலரைச் சம்பளமாகப் பெற்றிருக்கிறார். அதை வைத்து வீடு, குடும்பம் ஆகியவற்றை நியூயார்க் நகருக்கு அழைத்து வந்து இல்லற வாழ்வை நிம்மதியாக வாழும் சூழலை அவரால் பெற முடிந்தது. இது கன்னியாகுமரி கிராமத்தில் இருக்கும் ஒருவர், வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கும் சென்னை மாநகருக்குத் தனது குடும்பத்தினை அழைத்து வருவதற்குச் சமமாகும். ஆனால் இனி அப்படிப்பட்ட எழுத்தாளர்களையோ, ஷோ ரன்னர்களையோ நகரங்களில் பார்க்க முடியாது என்கிறார் வாரன். அதற்கான காரணங்களைப் பார்ப்பதற்கு முன்னர் ஸ்ட்ரீமிங் ஷோக்கள் என்றால் என்ன என்பதையும் பார்த்துவிடலாம்.
ஸ்ட்ரீமிங் ஷோக்கள் என்பது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓ.டி.டி தளங்களுக்கு ஒரு தொடரினைச் செய்வதாகும். இது நெட்வொர்க் ஷோக்கள் போன்று விளம்பர இடைவேளைகளோடு வராது. ஒரு நெட்வொர்க் ஷோவுக்கு 5 Act-களாகப் பிரித்து ஒவ்வொரு Act முடியும் தருணத்திலும் விளம்பர இடைவேளையைக் கவனம் கொண்டு எழுத வேண்டும். இல்லையேல் அடுத்த Act-டின் மேல் ஆர்வம் இருக்காது. விளம்பர இடைவேளைகள் இல்லாத ஸ்ட்ரீமிங் தளங்கள் 5 Act வடிவத்தினை 3 Act வடிவமாக மாற்றியுள்ளன. இதனால் 22 ஏபிசோடுகள் கொண்ட சீசன் 8 எபிசோடுகளாகச் சுருங்குகிறது. சொல்லப்போனால் சில தொடர்கள் 6 எபிசோடுகளோடு முடிந்துவிடுகின்றன. இது எழுத்தாளர்கள் 40 வாரங்கள் செய்ய வேண்டிய வேலையை 20 வாரங்களாகக் குறைத்துவிடுகிறது. மேலும் இது அவர்களை வருடத்திற்கு ஒரு வேலை செய்ய வேண்டிய இடத்தில் மூன்று வேலைகளைத் தேடி அலைய வைக்கிறது.

ஹாலிவுட்டில் எழுத்தாளர்களின் தேவை
இந்திய சினிமாக்களையோ தொடர்களையோ போல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என ஒற்றை நபருக்குக் கீழ் இயங்கும் வடிவத்திலிருந்து மாறுபடுகின்றன ஹாலிவுட் தொடர்கள். அங்கே ஒரு தொடர் எடுக்கப்படுகிறது என்றால் 'ரைட்டர் ரூம்' என்று எழுத்தாளர்கள் பலர் ஒரு அறையில் கூடி எழுதுகிறார்கள். அங்கே ஸ்டாஃப் ரைட்டரில் தொடங்கி, எடிட்டர், ஷோ ப்ரொடியூசர், ஷோ-ரன்னர் வரை வெவ்வேறு படிநிலைகள் இருக்கின்றன.
இதற்குப் பிறகு நடிகர் தேர்வு, இயக்குநர் தேர்வு, இசையமைப்பாளர் தேர்வென முன் தயாரிப்பு வேலைகள், தயாரிப்பு, பின் தயாரிப்பு வேலைகளைக் கடந்து டிவியில் ஒளிபரப்பப்படும். முன்னர் எல்லாம் ரைட்டர் ரூமில் இருக்கும் எழுத்தாளர்கள் ஷூட்டிங்கிலும் பங்கெடுப்பார்கள். ஆனால் தற்போது அவ்வாறு அனுமதிக்கப்படுவது கிடையாது. எழுதுவதோடு அவர்கள் வேலை முடிந்து விடுகிறது என்னும் நிலைக்குத் தள்ளுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் மினிரூம்கள் என்று அழைக்கப்படும் ஏமாற்று வேலைகளும் நடத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். மினிரூம் என்பதற்கு எந்த ஒரு வரையறையும் இல்லை. எடுத்துக்காட்டாக ஸ்ட்ரீமிங் ஸ்டுடியோக்கள் குறைவான எண்ணிக்கையில் எழுத்தாளர்களை வைத்துக் குறைவான ஊதியம் வழங்குவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். மினிரூம்களில் எழுதுபவர்கள் சில சமயங்களில் 10 வாரங்கள் வரை வேலை செய்வார்கள், பின்னர் வேறொரு வேலையைத் தேடுவதற்குப் போராட வேண்டியிருக்கும்.
இதுமட்டுமல்லாமல் டிஸ்னி நிறுவனம் 7,000 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி கடந்த ஆண்டு பெரும் கடன் சுமையை எதிர்கொண்டதால் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைத்துள்ளது. மற்ற பல ஸ்டுடியோக்கள் இதே போன்ற செலவு - சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதனால் எழுத்தாளர்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆக, ஸ்ட்ரீமிங்கிளும் 20 எபிசோடுகளாக மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையா என்றால், அது கிடையாது. வேலை செய்யும் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்கள் Writers Guild of America அமைப்பினர்.
அது என்ன Residual தொகை?
அதன் உறுப்பினர்களில் ஒருவரான ஜூலியா யார்க்ஸ், "'Friends' போன்ற ஒரு வெற்றிகரமான தொடர் எடுக்கப்படுகிறது என்றால், அது ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் போதும் அதற்கான ரெஸிடியூவல் தொகை (ராயல்டி உரிமைத் தொகை) ஒன்று எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும். 1960-களில் இதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டு ரெஸிடியூவல் செக்குகளாக இவை பெறப்பட்டன. ஆனால் ஸ்ட்ரீமிங்கில் அப்படியெல்லாம் கிடையாது. எடுத்துக்காட்டாக டிவி நெர்வொர்க்கில் 24,000 டாலர்களாகக் கொடுக்கப்பட்ட எழுத்துரிமை தொகை, ஸ்ட்ரீமிங்கில் 3 ஆண்டுகளுக்கு வெறும் 400 டாலர்களாகவே கொடுக்கப்படுகிறது” என்கிறார் அவர்.
இந்த Residual (ரெஸிடியூவல்) தொகையைப் பொறுத்தவரை, அது டிவி தொடரின் வெற்றியைப் பொறுத்து மாறுபடும் என்கிறார்கள். ஆனால் எத்தனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்கிற வெளிப்படைத்தன்மை அங்கே இருக்கும். ஆனால், ஸ்ட்ரீமிங்கில் அவ்வாறு இருக்காது. ஆகையால் அவர்கள் சொல்லும் தரவை ஏற்றுக்கொண்டு, கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற சூழல் எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைக் காரணம் காட்டி ரெஸிடியூவல் தொகையை 30%-ல் இருந்து 21% ஆகக் குறைக்கும் வேலையையும் ஸ்ட்ரீமிங் தளங்கள் செய்துள்ளன. இதுவே Writer Guild of America (WGA) போராட்டத்தைக் கையில் எடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.

உள்ளே புகுந்த செயற்கை நுண்ணறிவு
அதே போலச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கதைகளை எழுதும் தொழில்நுட்பத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஏனெனில் பல ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறுகிறார்கள். உதாரணமாக, 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்' போன்ற புகழ்பெற்ற படத்திற்கு அடுத்த பாகத்திற்கான கதையை எழுத வேண்டும் என்றால், சில பல ஒன் லைன்களை AI-யிடம் சொல்லி முழு கதையையும் வாங்கும் நிலையும் அங்கு உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சிகளாக வசனங்கள் உட்பட ஒரு பவுண்டட் ஸ்கிரிப்ட்டையே உருவாக்கி விடுகிறது AI.
ஆனால் எதிர்த்தரப்பு என்ன சொல்கிறது என்றால், "அது ஒரிஜினல் ஸ்கிரிப்ட் கிடையாது. இதுவரை மனிதர்களால் எழுதப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு அதுவாக உருவாக்கும் ஒரு கதையே ஒழிய அதுவாக புதிதாக எதுவும் தயாரிப்பது கிடையாது" என்று எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
போராட்டத்துக்குப் பணிந்த AMPTP
இதற்காக மே மாதம் தொடங்கிய வேலைநிறுத்தம் செப்டம்பர் 27 வரை தொடர்ந்து 148 நாள்கள் நீடித்தது. இதுவரை நடந்த போராட்டங்களில் அதிக நாள்கள் நடந்த போராட்டமாக இது இருக்கிறது. அதன் பயனாக AMPTP இவர்களின் வழிக்கு வந்து ஒரு மூன்றாண்டு ஒப்பந்தத்தை முன்வைத்தது. அதன்படி நெட்பிளிக்ஸ், வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி உள்ளிட்ட முக்கிய ஸ்டுடியோக்கள், திரைப்பட மேம்பாடு மற்றும் தயாரிப்பில் AI பயன்பாட்டைப் பற்றி விவாதிக்க ஆண்டுக்கு இரண்டு முறையாவது WGA-வுடன் சந்திக்க வேண்டும். எழுத்தாளர்கள் விருப்பம் இருந்தால் ஸ்கிரிப்ட்களை உருவாக்க AI-யை பயன்படுத்தலாம், ஆனால் அவர்களை ஸ்டுடியோக்கள் கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

அவர்களின் படைப்புகள் ஸ்ட்ரீமிங் தளங்களில் எத்தனை வியூஸ் வாங்கியுள்ளது என்பதை வெளிப்படையாகப் பார்த்துக் கொள்ளலாம். ரைட்டர்ஸ் ரூம்களில் குறைந்தபட்ச பணியாளர்களுக்கான உத்தரவாதம் கொடுக்கப்படும். ஒரு சீசனுக்கு எபிசோட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் 12%க்கும் அதிகமாக உயரும் என்று பல்வேறு தீர்மானங்கள் அதில் உள்ளன. இதை WGA ஏற்றுக்கொள்ள, தங்கள் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவிற்கு வெளியே, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் பயன்பாட்டிற்கான ரெஸிடியூவல் தொகை அதிகரிக்கும். மேலும் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளுக்கு போனஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இதைப் பற்றிப் போராட்டத்தை நடத்திய WGA உறுப்பினரான கோனோவர் கூறும் போது, "உண்மையில் நாங்கள் இல்லாமல் அவர்களால் ஒரு டாலர் கூட சம்பாதிக்க முடியாது. எங்கள் போராட்டம் அவர்களை வளைத்து உடைத்திருக்கிறது. ஆகவே எங்களுக்குத் தகுதியானதைக் கொடுத்துள்ளனர். நாங்கள் இறுதியில் வென்றுள்ளோம்!" என்கிறார் மகிழ்ச்சியாக!
மேலும் படிக்க WGA Strike: 148 நாள் போராட்டம், தள்ளிப்போன படங்கள், ஓ.டி.டி-க்களை எதிர்த்து எழுத்தாளர்கள் வென்ற கதை!