உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டி முடிந்த பிறகு இரு அணிகளின் கேப்டன்கள் இந்தப் போட்டியை பற்றிய சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவை இங்கே...

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், "இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணியினர் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். இந்தப் போட்டியிலும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்கள். இந்திய அணி தரமான பேட்டிங் லைன் அப்பை வைத்திருக்கிறது. அவர்கள் எங்களுக்கு எந்த விதத்திலும் வாய்ப்பே கொடுக்கவில்லை. இப்படி ஒரு வெற்றிக்கு இந்திய அணி தகுதியானதுதான். இங்கே கூடியிருந்த ரசிகர்கள் முழுவதும் இந்திய அணிக்குதான் சப்போர்ட் செய்தார்கள். ஆனாலும், இப்படி ஒரு தருணத்தில் இருந்தது ரொம்பவே சிறப்பானதாக இருந்தது" என்றார் கேன் வில்லியம்சன்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், "எனக்கு இந்த மைதானத்தைப் பற்றித் தெரியும். நான் இங்கே நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். இங்கே வெற்றி பெறுவதற்கான ஸ்கோர் என்ன என்பதை அறிவது எளிதல்ல. அதனால் இங்கே அவ்வளவு இலகுவாக ஃப்ரீயாக இருக்க முடியாது என எனக்குத் தெரியும். ஃபீல்டிங்கில் நாங்கள் கொஞ்சம் சொதப்பிய போதும் அமைதியாக இருந்தோம்.

9 போட்டிகளில் மிகச்சிறப்பாக சரியாக ஆடியிருக்கிறோம். எதோ ஒரு போட்டியில் சொதப்பல்கள் நிகழத்தான் செய்யும். எங்கள் அணியின் பேட்டர்கள் எல்லாம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்தத் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பை மறக்கவே முடியாது. கில் இளம் வீரராக முன் நின்று திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்குக் காயம் இருந்த போதும் மீண்டும் களமிறங்கி ஆடுவதற்கான தேவை இருந்தது. கோலி வழக்கம்போல தனது டிரேட்மார்க் ஆட்டத்தை ஆடி அசத்தி ஒரு புதிய மைல்கல்லை எட்டிவிட்டார். இந்தப் போட்டியில் பார்த்ததைப் போன்ற டெம்ப்ளேட்டோடுதான் நாங்கள் பேட்டிங் ஆட விரும்புகிறேன். ஆட்டத்தில் திருப்புமுனை தருணத்தை உண்டாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தோம். கடைசியில் ஷமி வந்து தனது திறனை வெளிக்காட்டி அசத்திவிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டி எங்களுக்குக் கொஞ்சம் சவாலானதாக இருந்தது. அதன்பிறகு, அரையிறுதி என்பதால் இந்தப் போட்டியும் எங்களுக்குக் கொஞ்சம் அழுத்தமாக இருந்தது. ஆனாலும், நாங்கள் எங்களின் வேலையை சரியாகச் செய்துவிட்டோம்!" என ரோஹித் சர்மா பேசியிருந்தார்.
மேலும் படிக்க Team India: "சிரமப்பட்டோம்... தடுமாறினோம்... ஆனாலும் நம்பிக்கை இருந்தது!" - ரோஹித் சொல்லும் லாஜிக்